Goldstars News
பிரதான செய்திகள்

ஹிஜாப் அணியாத பெண் அடித்து கொலை: ஈரானில் போலீசாரை கண்டித்து முஸ்லிம் பெண்கள் போராட்டம்

news-image

டெக்ரான்: ஈரானில் ஹிஜாப் சரியாக அணியாததால் போலீசார் தாக்கியதில் இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில் அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஹிஜாப்பை கழற்றி வீசி பெண்கள் போராட்டம் நடத்தினர். இஸ்லாமிய நாடான ஈரானில் 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனை கண்காணிக்க தற்போதைய அதிபர் இப்ராகிம் ரைசி, ‘ஹிஜாப் போலீஸ்’ என்ற தனிப்படையை உருவாக்கி உள்ளார். இவர்கள் ஹிஜாப்பை சரியாக அணியாத பெண்களை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், குர்திஸ்தான் மாகாணத்தை சேர்ந்த மாஷா அமினி (22) என்ற இளம்பெண், டெக்ரான் சென்ற போது, ஹிஜாப் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் பின்னர், தலையில் பலத்த காயத்துடன் இறந்தார். போலீசார் அடித்து கொன்று விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது போன்று கடந்த புதன்கிழமை மட்டும் 16 ஆயிரம் பெண்கள் மீது ஹிஜாப் போலீஸ் படை வழக்கு பதிவு செய்துள்ளது. இவர்களில் பலர் பொது இடங்களில் கடுமையாக தாக்கப்பட்டு உள்ளனர்.
போலீசார் தாக்கியதில் தலையில் காயமடைந்து கோமா நிலைக்கு சென்ற மாஷா, கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். ஆனால், மாஷா மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இச்சம்பவம் ஈரான் பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி, கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. வீட்டை விட்டு வெளியேறிய பெண்கள், அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிஜாப்பை கழற்றி வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அதிபர் ரைசிக்கு எதிராகவும் முழக்கமிட்டனர். ஹிஜாப் போலீசாரை கண்டித்து, சமூக வலைதளங்களிலும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இஸ்லாமிய நாடான ஈரானில், பெண்கள் இதுபோல் போராட்டத்தில் குதித்து இருப்பது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெளிநாட்டு பத்திரிகையாளர் ஒருவர் ஹிஜாப் போலீசாரின் அட்டூழியத்தை வீடியோவாக வெளியிட்டதன் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.