Goldstars News
பிரதான செய்திகள்

நான் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது டோனி மட்டும் தான் மெசேஜ் அனுப்பினார்: விராட் கோஹ்லி பேட்டி

news-image

துபாய்: கடந்த 2 ஆண்டுகளாக பார்ம் இன்றி தவித்து வந்த கோஹ்லி நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக 60 ரன் எடுத்தார். நேற்று ஆட்டம் முடிந்த பின்னர் கோஹ்லி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆட்டத்தின் முக்கிய தருணத்தில் ஆசிப் அலியின் கேட்சை அர்ஷ்தீப் தவறவிட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த கோஹ்லி, இதுபெரிய போட்டி, சூழ்நிலைகளும் சற்று இறுக்கமாக இருந்தது.

அழுத்தமான சூழ்நிலையின் போது யார் வேண்டுமானாலும் தவறு செய்யலாம். நான் முதலில் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடியது எனக்கு நினைவிருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக, நான் ஷாகித் அப்ரிடி பந்தில் மிக மோசமான ஷாட் அடித்து அவுட் ஆனது எனக்கு நினைவிருக்கிறது. அப்போது மறுநாள் காலை 5 மணி வரை, நான் தூங்க முடியாமல் கூரையையே பார்த்துக் கொண்டிருந்தேன். இனி ஒரு ஆட்டமும் கிடைக்காது என்று நினைத்தேன், என் கேரியர் முடிந்துவிட்டது. எனவே இதுபோன்ற உணர்வு ஏற்படுவது இயற்கையானது. மூத்த வீரர்கள் உங்களிடம் வருவார்கள். நீங்கள் (இளம் வீரர்கள்) அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். அப்போது தான், அடுத்த முறை வாய்ப்பு வரும்போது, நீங்கள் இதுபோன்ற முக்கியமான கேட்ச்களை பிடிக்க முடியும், என்றார்.

முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி குறித்து கேள்விக்கு பதில் அளித்த கோஹ்லி, நான் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியபோது எனக்கு மெசேஜ் அனுப்பியது டோனி மட்டும் தான். எனது செல்போன் எண் நிறைய பேரிடம் உள்ளது. ஆனால், யாரும் எனக்கு `மெசேஜ்’ அனுப்பவில்லை. டோனி மீது நான் கொண்டுள்ள மரியாதை மற்றும் இணைப்பு உண்மையானது. என்னால் அவர் பாதுகாப்பற்றவராக உணர்ந்ததில்லை. அதேபோல், அவரால் நான் பாதுகாப்பற்றவராக உணர்ந்ததில்லை.

நான் யாரிடமாவது ஏதாவது சொல்ல விரும்பினால், உதவி தேவைப்பட்டால் தனியாக அணுகுவேன். பொது இடத்தில் நீங்கள் ஒரு ஆலோசனையை வழங்கினால், அது எனக்கு எந்த மதிப்பையும் அளிக்காது. நான் 14 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். இதில் நீடிக்க கடினமாக உழைக்க வேண்டும், அணிக்காக உழைக்க நான் எப்போதும் ஆர்வமாக உள்ளேன், தொடர்ந்து செய்து வருகிறேன், என்றார்.