Goldstars News
பிரதான செய்திகள்

ஸ்குவாஷ் வளர்ச்சிக்கு எச்.சி.எல் ஸ்பான்சர்

news-image

சென்னை: நாட்டில் ஸ்குவாஷ் விளையாட்டு வளர்ச்சிக்காக  அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய ஸ்குவாஷ் விளையாட்டு கூட்டமைப்பு (எஸ்ஆர்எப்ஐ) உடன் இணைந்து எச்.சி.எல் நிறுவனம் செயல்பட உள்ளது. இது குறித்து சென்னையில் நேற்று  எச்சிஎல் நிறுவனத்தின் இணை துணைத் தலைவர் ரஜத் சந்தோலியா கூறியதாவது: ஸ்குவாஷ் விளையாட்டின் வளர்ச்சிக்காக எச்.சி.எல் நிறுவனம் எஸ்ஆர்எப்ஐ உடன் இணைந்து பல ஆண்டுகளாக பயணிக்கிறது. நாட்டில் ஸ்குவாஷ் விளையாட்டை பரவலாக்கவும், பள்ளி, கல்லூரி அளவில் பிரபலப்படுத்தவும்  எச்.சி.எல் திட்டமிட்டுள்ளது. அதற்காக பல்வேறு மட்டங்களில் போட்டிகளை நடத்தவும், புதிய, இளம் வீரர், வீராங்கனைகளை சர்வதேச அளவில் போட்டியிடும் வகையில் தயார் செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.

காமன்வெல்த், ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு   கிறிஸ் வாக்கர், கிரிகோரி கோல்டியர், செபாஸ்டியன் போன்மலிஸ் போன்ற சர்வதேச பயிற்சியாளர்களை கொண்டு முதல் கட்ட பயிற்சியை தொடங்கி உள்ளோம். இந்த 2 வார பயிற்சி முகாம் ஜூலை 25ம் தேதி வரை நடைபெறும். இந்த சர்வதேச போட்டிகளுக்கு பிறகு எங்கள் 5 ஆண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் சர்வதேச அளவிலான ஸ்குவாஷ் போட்டிகளை நடத்துவோம். இப்போட்டிகள் அடிமட்ட அளவில் இருந்து படிப்படியாக நடத்தப்படும். இந்தியாவில் ஸ்குவாஷ் வளர்ச்சிக்காக பல கோடி செலவிடப்படும். இவ்வாறு சந்தோலியா கூறினார்.

எஸ்ஆர்எப்ஐ பொதுச் செயலர் சைரஸ் புஞ்சா உடன் இருந்தார். காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க உள்ள ஜோஸ்னா சின்னப்பா, ‘காமன்வெல்த் போட்டிகளில் கடைசியாக 2014ல் பதக்கங்கள் வென்றோம். 2018ல் பதக்கங்கள் ஏதும் வசப்படவில்லை. ஆனால் இம்முறை கட்டாயம் பதக்கங்களை வெல்வோம். என்னைப் பொறுத்தவரை ஒற்றையர் பிரிவில் இறங்குவதற்கு தான் முக்கியத்துவம் தருகிறேன். அதே நேரத்தில் கலப்பு இரட்டையர் உள்ளிட்ட  இரட்டையர் பிரிவுகளிலும் விளையாடுவேன். இந்த முறை வலுவான அணியாக களம் காண இருக்கிறோம். காமன்வெல்த்  போட்டியை பொறுத்தவரை  இங்கிலாந்து, நியூசிலாந்து, மலேசியா, தென் ஆப்ரிக்கா அணிகள் நமக்கு சவாலாக இருக்கலாம்’ என்றார்.