Goldstars News

உலகளவில் பட்டினி கொடுமை அதிகரிப்பு; 19 கோடி பேர் உணவின்றி தவிப்பு: கடவுள் என்னும் முதலாளி...உழவனின் அருமையை உணரும் நாடுகள்

news-image

‘விவசாயம்’ நாட்டின் முதுக்கெலும்பு. விவசாயத்தையும், விவசாயிகளையும் காக்கும் எந்த நாடும் வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை. ஆனால், விவசாயமும், விவசாயிகளும் செத்து மடியும் சூழல் ஏற்பட்டால் அந்த நாடு வீழும். இதுதான் வரலாறு.  உச்சபட்ச அதிகாரத்தில் உள்ளவர்கள் பணத்துக்காக, நாட்டை கூறுபோட்டு விற்று விவசாய தொழிலுக்கு பல்வேறு தடைகள் விதித்தால் சோத்துக்கு சிங்கி அடிக்க வேண்டியதுதான். அந்த நிலைமைதான் உலகின் பல நாடுகளில் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் பட்டினி கொடுமையும், உணவு பாதுகாப்பின்மையும் அதிகரித்துள்ளது. அதற்கு வெளிப்படையாக பலியாகி இருக்கும் நாடுகள் இலங்கை, பாகிஸ்தான். இந்த நாடுகளில் தற்போதைய நிலவரப்படி 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உணவின்றி தவிக்கின்றனர்.

விவசாயம் பிறந்த பின்புதான் மனிதர்களிடையே நாகரீகம் பிறந்தது. எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், லாபமும் பார்க்காமல் மக்களின் பசியை ஆற்ற உழவு செய்பவன்தான் விவசாயி. விவசாயிகளின் ஒவ்வொரு வியர்வை துளிகள்தான், நாட்டில் உள்ள பிஞ்சுகள் முதல் ஆனானப்பட்ட கோடீஸ்வரர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களின் பசியை போக்குகிறது. என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சி கண்டு உலக நாடுகளுடன் பொருளாதாரத்தில் போட்டி போட்டாலும் விவசாயம் என்ற சக்தியை தவிர்க்க முடியாது. ‘வாழ்க்கை ஒரு சக்கரம்’ என்பதுபோல் தற்போது உள்ள நவீன உலகத்தில் விளை நிலங்களை அழித்து, கார்ப்பரேட் நிறுவனங்கள் வானுயர கட்டிங்களை நிறுவி, கை நிறைய பணம் பார்த்தாலும், ஒரு நாள் பசியின் கொடுமை வரும்போதுதான் விவசாயியின் அருமை தெரியும் என்பார்கள். அந்த நிலை தற்போது உலகளவில் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் கதறலுக்கு எந்த நாடு எப்போது செவி சாய்க்கவில்லையோ, ஒருநாள் அந்த நாடு கண்ணீர் விட்டு கதறி அண்டை நாடுகளிடம் கையேந்தும் நிலை வரும். அதற்கு சிறந்த உதாரணம்தான் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை.     

50 லட்சம் பேர்
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி, அன்னிய செலாவணி வரலாறு காணாத சரிவு, உள்நாட்டு உற்பத்தி பாதிப்பு, விவசாய தொழில் முடக்கம், இறக்குமதி செய்ய பணம் இல்லாத கொடுமை என கிட்டதிட்ட நாடே திவாலாகிவிட்டது. எல்லா தேவைகளுக்குமே அண்டை நாடுகள், சர்வதேச நிதியத்திடம் கையேந்தி நிற்கிறது. வரும் செப்டம்பர் மாதத்தில் இலங்கையில் கடுமையாக பசி, பட்டினி ஏற்பட்டு பஞ்சம் நிலவும் சூழ்நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஏப்ரல் முதல் ரசாயன உரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், அரிசி உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களின் உற்பத்தி முடங்கி உள்ளது. இதனால்,  இலங்கையில் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இறக்குமதி செய்யவும் அன்னிய  செலாவணி இல்லாததால் பசி, பட்டினியால் மக்கள் தவித்து வருகின்றனர்.  இரண்டு வேளை உணவு என்பதே அரிதாக மாறி உள்ளது. சுமார் 2.2 கோடி மக்கள் தொகை கொண்ட இலங்கையில் 50 லட்சம் பேர் உணவின்றி தவித்து வருகின்றனர்.   
விவசாயத்தில் ராணுவம்
உணவு நெருக்கடியை சமாளிப்பதற்காக தரிசு, கைவிடப்பட்ட 1,500 ஏக்கர் அரசு  நிலங்களில் விவசாயம் செய்து உணவு உற்பத்தியைப் பெருக்கும் பணியில் இலங்கை  ராணுவம் இறங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள  அனைத்து பாதுகாப்புப் படைத் தலைமையகங்களும் அமைப்புகளும் விவசாய பணிகளில் முழுவீச்சில் இறங்கி உள்ளன. இதேபோல், அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் ஒரு விடுமுறை அளிக்கப்பட்டு விவசாய பணிகளை செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

பாகிஸ்தானிலும் முடக்கம்
பாகிஸ்தானிலும் கிட்டதிட்ட இதேநிலைதான். ஆனால், மக்கள் தொகை அடிப்படையில் பார்க்கும்போது பாதிப்பு அளவு சற்று குறைவுதான். இதேநிலை நீடித்தால், இலங்கையாக பாகிஸ்தான் மாறும் காலம் வெகு தூரம் இல்லை என்பதே நிதர்சன உண்மை. பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் விலைவாசி உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் காட்டன், அரிசி, கோதுமை, பழங்கள் என பல்வேறு பொருட்கள் அதிகளவில் விவசாயம் செய்யப்படுகிறது. இதை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். ஆனால், தற்போது விவசாய தொழில் கடுமையாக முடங்கி உள்ளது.  இதனால், பாகிஸ்தான் உணவுக்கு திண்டாடுவது இல்லாமல், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. பாகிஸ்தானின் சிந்து மாகாணம் உட்பட 3 இடங்களில் சுமார் 10 லட்சம் பேர் உணவின்றி தவித்து வருகின்றனர்.

19 கோடி பேர்...
 உணவு நெருக்கடிகள் குறித்த உலகளாவிய அறிக்கை 2022ன் படி, உலகளவில்  பசியின் அளவுகள் அபாயகரமாக இருப்பதாகக் குறிப்பிடுகிறது. 2016-2021க்கு  இடையில் 53 நாடுகளில் உணவுப் பாதுகாப்பின்மை நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 10.8  கோடியில் இருந்து 19.3 கோடியாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, 38 நாடுகளில் 4.3 கோடிக்கும் அதிகமான மக்கள் உடனடியாக உயிர்காக்கும் ஆதரவைப் பெறாவிட்டால், பஞ்சம்  அல்லது கடுமையான உணவு நெருக்கடியால் உயிரை விடும் அபாயம் உள்ளதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. ஏற்கனவே சிறிது சிறிதாக அதிகமாகி வரும் இந்த பாதிப்புகளை, உக்ரைன்-ரஷ்யா போர் மேலும் அதிகமாக்கி இருக்கிறது. கடுமையான விலைவாசி உயர்வு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தடை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலக நாடுகளின் பணவீக்கம் ஆட்டம் கண்டுள்ளது. ஆனானப்பட்ட அமெரிக்கா தள்ளாடி கொண்டு இருக்கிறது. 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரிப்பால், விலைவாசி உயர்ந்துள்ளது.

தவிக்கும்போது அருமை
இதேபோல், பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு செல்வந்தராக இருந்த நாடுகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆடம்பரம் இல்லாமல் கூட வாழ்ந்துடலாம், உணவு இல்லாமல் வாழவே முடியாது. அது, அதிபராக இருந்தாலும் சரி... கோடீஸ்வரனாக இருந்தாலும் சரி... கூலி தொழிலாளியாக இருந்தாலும் சரி... உணவு இருக்கும் வரை விவசாயிகளின் அருமையும், உழைப்பும் தெரியாது. ஒருநாள் அந்த உணவு இல்லாமல் தவிக்கும்போதுதான் விவசாயி என்ற வார்த்தையே உச்சரிக்க தோன்றும். இன்று கடவுளாகவும், தொழிலாளியாகவும், முதலாளியாகவும், பசியை போக்கும் விவசாயிகளை பார்க்கும் நிலை மாறி உள்ளது. இதை தற்போது பாதிக்கப்பட்ட நாடுகள் உணர்ந்து வருகின்றன. ‘கடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி....’ என்ற நிலை ஒவ்வொரு மனதிலும் ஓட வேண்டும். விவசாயம் அழியாமல் இருக்கவும், விவசாயிகள் கண்ணீர் சிந்தாமல் இருக்கவும் உறுதிமொழி ஏற்க வேண்டிய கட்டாயம் உருவாகிக் கொண்டிருக்கிறது.  

உணவு நெருக்கடி டாப் 10 நாடுகள்
உலகில் உணவு நெருக்கடி பிரச்னையை சந்தித்து வரும் முதல் 10 நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் உள்ளது. காங்கோ ஜனநாயக குடியரசு, ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, ஏமன், வடக்கு நைஜீரியா, சிரிய அரபு குடியரசு, சூடான், தெற்கு சூடான், பாகிஸ்தான், ஹைதி ஆகிய 10 நாடுகள் உணவு நெருக்கடியில் அதிகமாக சிக்கி தவிக்கின்றன.

குழந்தைகள் பாதிப்பு அதிகரிப்பு
பாகிஸ்தானில் உணவு நெருக்கடி காரணமாக குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது.  இது ஒரு பெரிய பொது சுகாதார பிரச்னையாக மாறி உள்ளது. சிந்து மாகாணத்தில் ஏப்ரல் 2021-பிப்ரவரி 2022 வரை 5 வயதுக்குட்பட்ட 6,36,000 குழந்தைகள்  மற்றும் 38,000 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  லர்கானா மாவட்டத்தில் 12.3%, தாண்டோ அல்லா யார் மற்றும் தாண்டோ முஹம்மது கான் மாவட்டங்களில் 5%, உமர்கோட் மாவட்டத்தில் 1,05,750, கம்பர் ஷாதாட்கோட் 95,420, ஷிகர்பூர் மாவட்டங்களில் 70,471 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

விலைவாசி உயர்வு கிடுகிடு
ஜூன் 1, 2022 நிலவரப்படி, கடந்த இரண்டு வாரங்களில் விவசாய விலைக் குறியீடு 5% குறைந்துள்ளது, ஆனால், ஜனவரி 2021 உடன் ஒப்பிடும்போது 40% அதிகமாக உள்ளது. ஜனவரி 2021 உடன் ஒப்பிடும்போது, ​​சோளம் மற்றும் கோதுமை விலை முறையே 42% மற்றும் 60% அதிகமாக உள்ளது. அரிசி விலை 12% குறைவாக உள்ளது. உலகளாவிய உணவு, எரிபொருள் மற்றும் உரங்களின் விலைகள் 2023ல் ஓரளவு குறைக்கப்படக் கூடும். ஆனால், அதற்கு முன்பாக 2022ல் இது கடுமையாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எகிறிய உணவு பணவீக்கம்
ஜனவரி - ஏப்ரல் 2022க்கு இடையில் பெரும்பாலான நாடுகள்  5 சதவீதத்துககும் அதிகமாக உணவு பண வீக்கத்தை சந்தித்துள்ளன. பல நாடுகள் இரட்டை இலக்கை தொட்டுள்ளன. 70 சதவீத நாடுகளில் உணவு விலை பணவீக்கமானது, ஒட்டு மொத்த பணவீக்கத்தை விட அதிகமாக உள்ளது. உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக, 2024ம் ஆண்டி இறுதியில் உணவுப் பாதுகாப்பின்மையும், உணவு பணவீக்கமும் ேமலும் அதிகமாகும் வாய்ப்புகள் உள்ளன.

அடுத்தது துருக்கி...
உலக அளவில் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கை, பாகிஸ்தான், வெனிசுலா உள்ளிட்ட நாடுகள் பட்டியலில் துருக்கியும் உள்ளது. துருக்கியில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு ஆண்டு பணவீக்க விகிதம் 61.14 சதவீதம் உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.  ரஷ்யா-உக்ரைன் மோதலால் துருக்கியில் கடுமையான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் விலையும் உயர்ந்துள்ளது. துருக்கிய நாணயமான லிராவின் மதிப்பும் கடும் சரிவு கண்டு வருகிறது.

டீ குடிப்பதை குறையுங்க....
தேயிலை தோட்டங்களுக்கு பெயர்போன நாடு இலங்கை. இலங்கையிடம் இருந்து அதிகளவில் தேயிலை இறக்குமதி செய்த நாடு ரஷ்யா. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக தேயிலை தோட்ட தொழில் முற்றிலும் முடங்கியது. டீயை அதிகமாக குடிக்கும் நாடு பாகிஸ்தான். உலகிலேயே அதிகளவு தேயிலை இறக்குமதி செய்யும் நாடும் பாகிஸ்தான் தான். கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்புள்ள தேயிலையை அது இறக்குமதி செய்துள்ளது. இந்த தொகை அனைத்தும் கடன் வாங்கப்பட்டுள்ளது. இதனால், கடன் வாங்கி தேயிலை இறக்குமதி செய்வதை தவிர்க்க, தினமும் டீ குடிப்பதை 1 அல்லது 2 கப் அளவில் குறைத்து கொள்ள வேண்டும் என்று தனது நாட்டு மக்களை பாகிஸ்தான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ஆடுகளை பரிசாக அனுப்பி கடன் கேட்கும் பாகிஸ்தான்
பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ஐக்கிய அரபு அமீரக அதிபருக்கு பரிசுகள் வழங்குவதன் மூலம் அவரது மனதை மாற்றி நிதி உதவி வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் 100 ஆடுகளை பரிசாக அனுப்பியுள்ளார். இந்த முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2020ம் ஆண்டில், உயிருள்ள விலங்குகளை ஏற்றுமதி செய்வதற்கு பாகிஸ்தான் தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

3 மடங்கு ஏறிய உர விலை
வரவிருக்கும் மாதங்களில், உலகின் பல பகுதிகளில் உணவு உற்பத்தியை பாதிக்கக் கூடிய வகையில் உரம் பற்றாக்குறை ஏற்படும். இப்பிரச்னையை சமாளிப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். உலகளவில் உரங்களின் விலை கடந்த மார்ச்சில் உயர்ந்தன, ஜனவரி 2022 முதல் கிட்டத்தட்ட 20% அதிகரித்துள்ளது இது, கடந்தாண்டு இருந்ததை விட 3 மடங்கு அதிகமாகும். ரஷ்யாவும், பெலாரசும் முக்கிய உர ஏற்றுமதியாளர்களாக இருக்கின்றன.

விவசாயிகளும் வீரர்கள்தான்
வறட்சி, இயற்கை பேரிடர் போன்ற காரணங்களால் பயிர்கள் நாசமடைந்ததால் லட்சக்கணக்கான விவசாயிகள் உயிரைவிட்டு உள்ளனர். நாட்டை காக்க ஒவ்வொரு வீரரும், குடும்பத்தை மறந்து, சந்தோஷத்தை இழந்து தாய் நாடே முக்கியம் என்ற தாரக மந்திரத்துடன் போராடி வருகின்றனர். விவசாயியும் ஒவ்வொரு குடிமக்களின் பசியை போக்க தனது சொத்தை எல்லாம் இழந்து கடன் பட்டு பயிரிடும் பயிர்கள் நாசமடையும்போது, விவசாயத்தை தொடர முடியாமல் உயிரை மாய்த்து கொள்கின்றனர். என்ன நடந்தாலும் விவசாயத்தை விட்டு மாறாமல் அவர்களது வாரிசுகளும் விவசாயத்தை கட்டி காக்கும் வரை விவசாயிகளும் நாட்டை காக்கும் வீரர்கள்தான்.

விவசாயத்தில் டாப் 20 நாடுகள்
கோதுமை, அரிசி, எண்ணெய், கரும்பு, தேங்காய், காய்கறி, சோளம் உள்ளிட்ட பல்வேறு விவசாய பொருட்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் முதல் 20 நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், 2வது இடத்தில் சீனாவும், 5வது இடத்தில் இந்தியாவும் உள்ளது.
1. அமெரிக்கா
2. சீனா
3. பிரேசில்
4. அர்ஜென்டினா
5. இந்தியா
6. பிரான்ஸ்
7. ரஷ்யா
8. ஜெர்மனி
9. ருமேனியா
10. இங்கிலாந்து
11. நைஜீரியா
12. இத்தாலி
13. எத்தியோப்பியா
14. தென்னாப்ரிக்கா
15. இந்தோனேசியா
16. தான்சானியா
17. எகிப்து
18. பிலிப்பைன்ஸ்
19. வியட்நாம்
20. பெலாரஸ்