Goldstars News

200 பேர் பங்கேற்பு: ‘ஒலிம்பியாட்’ செஸ் போட்டி பார்வையிட வீரர்கள் தேர்வு

news-image

நெல்லை:  சென்னையில் முதல் முறையாக நடைபெறஉள்ள 44வது ஒலிம்பியாட் செஸ் போட்டிகளை பார்வையிடுவதற்கான வீரர்கள் தேர்வு நெல்லையில் நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 44வது ஒலிம்பியாட் சதுரங்க சாம்பியன்ஷிப்- 2022 போட்டி முதல் முறையாக நம் நாட்டில் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் உலக அளவில் சதுரங்க வீரர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து பங்கேற்க வருகைதர உள்ளனர்.

இப்போட்டியை நெல்லையைச் சேர்ந்த 15 வயதுக்கு உட்பட்ட தலா ஒரு ஆண் பெண் சதுரங்க வீரர்கள் இலவசமாக பார்வையிடவும் சர்வதேச வீரர்களுடன் கலந்துரையாடல் நடத்தவும் வாய்ப்பு பெறுவதற்கான தகுதி போட்டி நெல்லை வஉசி மைதானத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.  அனைத்து இந்திய சதுரங்க பெடரேஷன் வழிகாட்டுதலுடன் தமிழ்நாடு சதுரங்க கழக அனுமதியோடு இந்த போட்டி நடத்தப்பட்டது. இதில் 15 வயதிற்கு உட்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர்கள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் போட்டிகளைத்  துவக்கிவைத்தார். செல்வமணிகண்டன் நடுவராக இருந்து போட்டிகளை நடத்தினார். ஏற்பாடுகளை செயலாளர் பால்குமார், இணை ெசயலாளர்கள் முருகானந்த், பாலசுப்பிரமணியன் செய்திருந்தனர். தொடர்ந்து இப்போட்டி 2ம் நாளாக இன்றும் நடக்கிறது. மேலும் முதல் 25 இடங்களைப் பிடிக்கும் ஆண்கள் மற்றம்
பெண்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்படுகின்றன.