Goldstars News

டெல்லியில் நாளை மறுதினம் முதல் டி20 போட்டி; இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி.! சவாலுக்கு தென் ஆப்பிரிக்கா ரெடி

news-image

புதுடெல்லி: இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நாளை மறுதினம் நடைபெறுகிறது. கே.எல். ராகுல் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இதில் களம் காணுகிறது. இந்த தொடரில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரோஹித்சர்மா, விராட்கோஹ்லி, பும்ரா, முகமதுஷமி, ஜடேஜா போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தினேஷ் கார்த்திக்கை சேர்த்துள்ளதால், இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணியிலும், ஐபிஎல் கிரிக்கெட்டில் அசத்திய இளம் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

அந்த அணி, இளம் இந்திய அணியை வீழ்த்த திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதற்காக பலமான அணியை உருவாக்கியுள்ளது. குறிப்பாக ஐபிஎலில் சிறப்பாக செயல்பட்ட குவின்டன் டி காக், மார்க் ரம், யான்சன், வான்டெர்துஷன், டுவைன் பிரிடோரியஸ் ஆகியோரை களமிறக்கி இந்திய அணிக்கு சவால் அளிப்பார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்திய பிட்ச்கள் ஸ்பின்னர்களுக்கு ஒத்துழைப்பதால், வேகப்பந்து வீச்சாளர்களை நம்பியுள்ள ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற அணிகள் இந்தியாவில் திணறுவது வழக்கம். ஆனால் இந்த முறை அதை தவிர்க்க, தென்னாப்பிரிக்க அணி, அபாரமான திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது. இதற்காக கேசவ் மகாராஜ், சாம்சி, எய்ரன் மார்க்கரன் போன்ற ஸ்பின்னர்கள் இந்தியா வந்ததில் இருந்து, தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டு பந்துவீசி வருகிறார்கள்.

இதனால் இத்தொடரில் தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்கு எதிராக நிச்சயம் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஹர்திக் பாண்டியா, ஹர்சல் படேல் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் தவிர, அனைவரும் பயிற்சியில் பங்கேற்றனர். கேப்டன் கே.எல்.ராகுல், துணை கேப்டன் ரிஷப் பன்ட், ஸ்ரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக், இஷான் கிஷான், ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா, அக்சர்படேல், புவனேஷ்வர்குமார், ஆவேஷ்கான், உம்ரான்மாலிக் உள்ளிட்ட அனைவரும் பயிற்சியில் பங்கேற்றனர். தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், வேகப்பந்து வீச்சாளர்கள் ஆவேஷ்கான், உம்ரான்மாலிக் ஆகியோருடன் நீண்ட நேரம் உரையாடி ஆலோசனைகள் வழங்கினார். இதுபோல் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ்மம்ப்ரே வெங்கடேஷ் மற்றும் சிமர்ஜீத் ஆகியோருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

துணை கேப்டன் ரிஷப் பன்ட், ஸ்ரேயாஸ் அய்யர், ஆகியோர் ஆவேஷ் மற்றும் உம்ரான் மாலிக்கை பந்துவீச்சை மாறி மாறி எதிர்கொண்டனர். தினேஷ்கார்த்திக் ஸ்பின்னர்கள் குல்தீப் யாதவ் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோரை எதிர்கொண்டார். பயிற்சியின்போது கேப்டன் கே.எல்.ராகுல், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் மற்றும் தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா ஆகியோருடன் டிராவிட் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்திய அணியை பொறுத்தமட்டில் டி20 உலக கோப்பைக்கு முன்னோட்டமாக இந்த தொடர் பார்க்கப்படுகிறது. எனவே இத்தொடரில் ஒவ்வொரு வீரரும் தங்களது திறமையை நிரூபிக்க போராடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. அதே நேரத்தில் பவுலா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. எனவே இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல தீனியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.