Goldstars News
பிரதான செய்திகள்

உக்ரைன் இரும்பு ஆலையில் சிக்கித் தவித்த மக்கள் மீட்பு: ரஷ்ய போர்க்கப்பல் மீது தாக்குதல்

news-image

கீவ்: மரியுபோலில் ரஷ்ய படை முற்றுகையிட்டுள்ள இரும்பு ஆைலயில் பதுங்கி இருந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும்  மீட்கப்பட்டுள்ளனர் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனின் மரியுபோல் நகர் உருக்குலைந்து உள்ளது. சில நாட்களுக்கு முன் அந்த நகரை முழுமையாக கைப்பற்றி விட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்தது. ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்ததால் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் உக்ரைன் வீரர்களும், ஏராளமான பொதுமக்களும் தஞ்சம் அடைந்தனர். சரண் அடைய ரஷ்யா விடுத்த உத்தரவை உக்ரைன் வீரர்கள் ஏற்க மறுத்தனர். உக்ரைன் வீரர்களும்,பொதுமக்களும்  சுரங்கங்களில் தங்கி இருந்தனர்.

அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் சிக்கி இருந்த பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரஷ்யாவுக்கு உலக நாடுகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து ஐநா, செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து ஆலையில் இருந்த பொதுமக்களை மீட்கும் பணி தொடங்கியது. இரும்பு ஆலையின் சுரங்கங்கள், பதுங்கு குழிகளில் சுமார் 200 பேர் இருந்தனர். இந்நிலையில், இரும்பு ஆலையில் இருந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.

ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் 70 நாட்களுக்கு மேல் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்ய ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைன் ராணுவமும் ரஷ்யாவுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய கட்டுபாட்டில் உள்ள பாம்பு தீவில் உக்ரைன் ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில், ரஷ்யாவின் மிகப்பெரிய போர் கப்பலான ‘மாக்ராவ்’ அழிக்கப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ம் தேதி கருங்கடலில் நிறுத்தப்பட்டிருந்த ‘மாஸ்கோவ்’ போர்க்கப்பலை டிரோன் தாக்குதல் மூலம் உக்ரைன் அழித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஒடேசா அருகே கருங்கடலில் இருந்த உக்ரைனின் 2 மிகப்பெரிய போர்க்கப்பல்களை குண்டுவீசி அழித்து விட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

* பள்ளி மீது குண்டுவீச்சு
கிழக்கு உக்ரைனின் லுகான்ஸ் பகுதியில் பிலோகோரிவ்கா என்ற கிராமத்தில் உள்ள பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மக்கள் அடைக்கலம் அடைந்திருந்தனர். இதன் மீது ரஷ்ய ராணுவம் நேற்று நடத்திய வான்வழி தாக்குதலில், பள்ளிக் கட்டிடம் முழுவதுமாக சேதமானது. இதில், அங்கு தங்கிருந்த 12க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மற்றவர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர்.

* அமெரிக்க அதிபர் மனைவி உக்ரைனுக்கு திடீர் பயணம்
ரஷ்யாவுடன் 2 மாதங்களுக்கு மேலாக போரிட்டு வரும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, பல்வேறு நாட்டு தலைவர்கள் நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக, அமெரிக்க அதிபர் பைடனின் மனைவி ஜில் பைடன் நேற்று திடீரென உக்ரைன் சென்றார். மேற்கு உக்ரைனில் உள்ள சிறிய கிராமத்தில், ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலினாவை சந்தித்து, அன்னையர் தின வாழ்த்து தெரிவித்தார். போரில் ஈடுபட்டுள்ள உக்ரைன் ராணுவத்துக்கும் தனது ஆதரவை அவர் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

* ‘டூம்ஸ்டே’ அச்சுறுத்தல்
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் நாஜிப்படையை வென்றதின் அடையாளமாக, ஒவ்வொரு ஆண்டும் மே 9ம் தேதியை ரஷ்ய ராணுவம் வெற்றி தினமாக கொண்டாடி வருகிறது. தற்போது, உக்ரைன் போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இன்று இந்த வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நடக்கும் ராணுவ அணிவகுப்பில் ரஷ்யாவின்  ராணுவ பலத்தை பிரகடனப்படுத்தும் வகையில், இதுவரையில் வெளியில் காட்டப்படாத பயங்கர அணு ஏவுகணைகள் இடம் பெற உள்ளன. உக்ரைனுக்கு ஆயுத, பொருள் உதவி அளித்தும், ரஷ்யாவின் மீது பொருளாதார தடைகளை விதித்தும் வரும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை மிரட்டும் வகையில் இந்த அணிவகுப்பு நடக்கிறது. இந்நிலையில், அணு குண்டுகளை வீசுவதற்காகவே ரஷ்யா வைத்துள்ள பிரமாண்ட விமானமான ‘டூம்ஸ்டே’, 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாஸ்கோவின் மீது நேற்று முன்தினம் பறந்தது. இது, அமெரிக்கா, நேட்டோ நாடுகளுக்கு ரஷ்யா விடுத்த அணு ஆயுத தாக்குதல் எச்சரிக்கையாக கருதப்படுகிறது.