Goldstars News
பிரதான செய்திகள்

உக்ரைன் திடீர் வேகம்: பறிபோன சில இடங்கள் மீட்பு

news-image

லிலிவ்: உக்ரைன் - ரஷ்யா போர் 70 நாட்களை கடந்து தொடர்ந்து வருகிறது. மரியுபோல், கருங்கடல் ஒட்டியுள்ள பகுதிகள், கிழக்கு உக்ரைன் மற்றும் தெற்கு உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேற்கு நாடுகளின் ஆயுத உதவியால் உக்ரைன் ராணுவம் திடீர் உத்வேகம் பெற்று பதிலடி கொடுத்து வருகிறது. அதன்படி, தெற்கு உக்ரைனில் ரஷ்யா கட்டுப்பாட்டில் இருந்த கெர்சன், மைகோலாய் நகரங்களின் சில பகுதிகளை மீட்டுள்ளதாகவும், கிழக்கில் உக்ரைனில் உள்ள டான்பாஸ் பகுதியில் 11 ரஷ்ய தாக்குல்கள் முறியடிக்கப்பட்டு உள்ளதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் டான்பாஸில் உள்ள நகரங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் 5 பேர் கொல்லப்பட்டனர். 25 பேர் காயமடைந்தனர். வீடுகள் மற்றும் பள்ளி ஒன்றும் சேதமடைந்தன. உக்ரைன் முழுவதும் ஆயுதங்கள் சப்ளையை தடுக்க ரயில் நிலையங்கள் மீது ரஷ்யா தாக்குதலை தொடர்ந்தன. வான்வழி தாக்குதல்களும் தொடர்ந்தது. உக்ரைன் தலைநகர் கீவ் அருகிலும் குண்டு வீசப்பட்டது. அமைதியாக இருந்த மேற்கு பகுதியில் உள்ள லிவிவ் நகரத்தில் நேற்று அதிகாலை தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்ததால் மக்கள் பீதி அடைந்தனர். இந்த பகுதி வழியாகதான் மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவிகள் செல்வதால், ரஷ்யா வான்வழி தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது. மரியுபோலிலும் தாக்குதல் தொடர்ந்தது.