Goldstars News
பிரதான செய்திகள்

இலங்கையை மிரட்டி காரியம் சாதித்த சீனா: உரத்துக்கு தர வேண்டிய ரூ.51 கோடி வசூல்

news-image

கொழும்பு:  இலங்கையில் விவசாயத்துக்கு ரசாயன உரங்களுக்கு பதிலாக இயற்கை உரத்தை பயன்படுத்துவதற்கான உத்தரவை அதிபர் கோத்தபய ராஜபக்சே கடந்தாண்டு பிறப்பித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சீனாவை சேர்ந்த, ‘கிங்காடோ சீவின் பயோடெக்’ என்ற நிறுவனத்திடம் இருந்து சிலோன் உர கம்பெனி, இயற்கை உரங்களை வாங்கியது. கப்பலில் வந்து சேர்ந்த இந்த உரத்தை ஆய்வு செய்தபோது அதில் கலப்படம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த உரத்தை இலங்கை நிறுவனம் வாங்கவில்லை. மேலும், சீன உர நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய தொகையை இலங்கை வங்கியும் நிறுத்தி வைத்தது. இலங்கை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, வங்கி இந்த நடவடிக்கையை எடுத்தது. இதனால், இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையே பிரச்னையாக வெடித்தது.

இலங்கை வங்கியின் இந்த நடவடிக்கையால் தனது நாட்டு நிறுவனத்துக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக சீன அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக, பணத்தை விடுவிக்க மறுத்த இலங்கையின் முன்னணி வங்கியான ‘பீப்பிள்ஸ் பேங்க் ஆப் ஸ்ரீலங்கா’வை கறுப்பு பட்டியலில் சேர்த்தது. இதனால், அதிபர் கோத்தபய அதிர்ச்சி அடைந்தார். இதைத் தொடர்ந்து, சீனாவுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், பணத்தை கொடுப்பதாக ஒப்புக் கொண்டது. இந்த சமரச முடிவை நீதிமன்றத்தில் இலங்கை அரசு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, வங்கிக்கு விதித்த தடையை நீதிமன்றம் நேற்று  நீக்கியது. இதையடுத்து, சீன நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ.51.28 கோடி விரைவில் விடுவிக்கப்படும் என்று இலங்கை வங்கி அறிவித்துள்ளது.