Goldstars News
பிரதான செய்திகள்

ரோகித் சர்மாவுடன் மோதல் இல்லை: ஒரு நாள் தொடரில் பங்கேற்பேன்- கோஹ்லி

news-image

இந்திய அணியின் ஒரு நாள் கேப்டன் ரோகித் சர்மாவுடன் எந்த மோதலும் இல்லை என தெரிவித்துள்ள டெஸ்ட் அணி கேப்டன் கோஹ்லி, தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பங்கேற்பேன் என தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா செல்லும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட்(டிச.26-ஜன.15), ஒருநாள் தொடரில்(ஜன.19, 21, 23) பங்கேற்க உள்ளது. இதற்கான இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக கோஹ்லி தொடர்ந்தார். துணைக் கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவுக்கு தரப்பட்டது. ஒருநாள் தொடருக்கு கோஹ்லிக்கு பதில் ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து ஒருவர் தலைமையில் மற்றொருவர் விளையாட தயாராக இல்லை என தகவல் வெளியானது. காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா விலகினார். இதற்கு பதிலடியாக ஒரு நாள் தொடரில் இருந்து விலக கோஹ்லி விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், கோஹ்லி நிருபர்களிடம் கூறியதாவது: தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு தேவை என பி.சி.சி.ஐ., அமைப்பிடம் கேட்கவில்லை. போட்டியில் விளையாட தயாராக உள்ளேன். கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு எப்போதும் நான் தயாராகவே உள்ளேன்.

 

எனது கடமைகளில் நான் நேர்மையாக உள்ளேன். டெஸ்ட் அணி தொடர்பான ஆலோசனையின் போது, அணி தேர்வாளர்கள் என்னிடம், ஒரு நாள் போட்டிக்கு நான் கேப்டன் இல்லை என்பதை தெரிவித்தனர். ரோகித் சர்மாவிற்கும் எனக்கும் இடையே எந்த பிரச்னை இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக இதனை திரும்ப திரும்ப சொல்லி களைப்படைந்துவிட்டேன். ஐசிசி நடத்திய போட்டிகளில் கோப்பை வெல்லவில்லை என்பது எங்களுக்கு தெரியும். டுவென்டி -20 அணி கேப்டன் பதவியில் இருந்து விலகியது ஆக்கப்பூர்வமான நடவடிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.