Goldstars News

இந்தியா அன்பளிப்பாக வழங்கியது - ஆஸ்திரேலிய பிரதமரால் மெல்போர்னில் திறக்கப்பட்ட மகாத்மா காந்தி சிலை அவமதிப்பு

news-image

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ராவவில்லி பகுதியில் ஆஸ்திரேலியா-இந்தியா சமூக மையம் அமைந்துள்ளது. இங்கு, இந்தியாவின் 75ம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் கடந்த வியாழக்கிழமை நடந்தன. அப்போது இந்தியா சார்பில் பரிசாக அளிக்கப்பட்ட ஆள் உயர வெண்கல காந்தி சிலை சமூக மையத்தின் வளாகத்தில் நிறுவப்பட்டது. ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் சிலையை திறந்து வைத்தார். ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதர் ராஜ்குமார் மற்றும் அந்நாட்டு அரசியல் தலைவர்கள் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த சிலை திறக்கப்பட்ட 24 மணி நேரத்தில் அடித்து சேதப்படுத்தி அவமரியாதை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விக்டோரியா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இரும்பு ஆயுதம் கொண்டு சிலையை சில முறை அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் கூறி உள்ளனர். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி முதல் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்குள் நடந்திருக்கலாம் என போலீசார் கூறி உள்ளனர். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆஸி பிரதமர் மோரிசன், இதுபோன்ற கலாச்சார நினைவுச்சின்னங்கள் மீதான தாக்குதலை சகித்துக் கொள்ள முடியாது எனவும், குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை வழங்கப்படும் என்றும் கூறி உள்ளார். ஆஸி.-இந்திய கலாச்சார மையம் கவலை தெரிவித்துள்ளது.