Goldstars News

சர்வதேச திரைத்துறையில் முதல்முறையாக விண்வெளியில் சினிமா படப்பிடிப்பு

news-image

மாஸ்கோ: சர்வதேச திரைத்துறையில் முதல்முறையாக விண்வெளி மையத்தில் ரஷ்ய விஞ்ஞானிகள் சினிமா படப்பிடிப்பு நடத்த உள்ளனர். இதற்காக அவர்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு நடிகையுடன் செல்கின்றனர். ரஷ்ய மூத்த விண்வெளி வீரர் ஆண்டன் ஷ்காப்லெரோவ், நடிகை யூலியா பெரெசில்ட் (வயது 37), திரைப்பட இயக்குனர் கிளிம் ஷிபென்கோ (வயது 38) ஆகியோர் இன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி பயணிக்கின்றனர். இவர்களில் பெரெசில்ட், ஷிபென்கோ ஆகியோர் ‘தி சேலஞ்ச்’ (சவால்) என்ற திரைப்படத்துக்கான படப்பிடிப்பை இங்கு நடத்துகின்றனர். அவர்கள் இதை வெற்றிகரமாக நடத்தி முடித்தால், சர்வதேச அளவில் முதல்முதலாக விண்வெளியில் சினிமா படப்பிடிப்புக்கான அரங்கு அமைத்து படமாக்கப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையை ரஷ்யா பெறும்.

கதைப்படி, விண்வெளிக்கு சென்ற விண்வெளி வீரர்களில் ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. அவர் பூமிக்கு திரும்பி வந்து சிகிச்சை பெற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்காக ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் விண்வெளிக்கு சென்று, அவருக்கு சிகிச்சை அளிப்பது போன்ற கதையை படமாக்க உள்ளனர். விண்வெளி பயணிகள் 3 பேரும், கஜகஸ்தானில் உள்ள பைகானூர் காஸ்மோட்ரோமில் இருந்து சோயுஸ் எம்.எஸ்-19 விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பறக்கின்றனர். இவர்கள் 12 நாட்கள் விண்வெளியில் தங்கியிருப்பார்கள். பணிகள் முடிந்த பின்பு வரும் 17ம் தேதி பூமிக்கு திரும்புவார்கள்.

இவர்களுடன் விண்வெளி வீரர் ஓலெக் நோவிட்ஸ்கி பூமிக்கு திரும்ப உள்ளார். அவர் கடந்த  6 மாதங்களாக விண்வெளி மையத்தில் தங்கி பணிபுரிந்து வந்தார். இதன் நேரடி ஒளிபரப்பானது நாசா டி.வி சேனல் மற்றும் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. ரஷ்யாவின் புதிய முயற்சியை ஹாலிவுட் உள்ளிட்ட சர்வதேச சினிமா துறையினர் ஆச்சரியத்துடன் கவனித்து வருகின்றனர்.