Goldstars News
பிரதான செய்திகள்

ராணுவ கட்டமைப்பை வலுப்படுத்தும் சீனா.! - வீரர்கள் எளிதாக வந்து செல்வதற்காக இந்திய எல்லையில் 30 விமான நிலையம்

news-image

புதுடெல்லி: இந்திய எல்லைக்கு வீரர்கள் எளிதாக வந்து செல்வதற்கு வசதியாக இந்திய எல்லையில் உள்ள பகுதிகளில் 30 விமான நிலையங்களை கட்டுவதற்கான நடவடிக்கையில் சீனா இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய - சீன எல்லையில் கடந்த ஓராண்டுக்கு முன் இருநாட்டு வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்கு பின், இருநாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக சீனாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஒன்றிய அரசு ஈடுபட்டது. இந்நிலையில், இந்தியாவை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் ராணுவம் மற்றும் சிவில் சர்வீசஸ் உள்கட்டமைப்பை சீனா அரசு முடுக்கிவிட்டுள்ளது.

அதன்படி, திபெத் மற்றும் சின்ஜியாங் மாகாணங்களில் சுமார் 30 விமான நிலையங்கள் கட்டுவதற்கான செயல்வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்திய எல்லையில் உள்ள திபெத்தில், ராணுவ உள்கட்டமைப்பை வேகமாக சீனா உருவாக்கி வருகிறது. திபெத்தின் தலைநகர் லாசாவையும், இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் அருகே அமைந்துள்ள்ள திபெத்திய எல்லை நகரமான நிங்சியையும் இணைக்கும் அதிவேக புல்லட் ரயிலை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இதுகுறித்து, அந்நாட்டின் மக்கள் விடுதலை ராணுவத்தின் (பி.எல்.ஏ) வெஸ்டர்ன் தியேட்டர் ராணுவ போக்குவரத்து மைய அதிகாரி கூறுகையில், ‘தற்போது திபெத் மற்றும் சின்ஜியாங் பகுதிகளில் சுமார் 30 சிவில் விமான நிலையங்கள் கட்டப்பட்டும், சில இடங்களில் அதற்கான இடங்களும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.

எல்லைப் பகுதிகளில் சிவில் விமானப் போக்குவரத்தை விரிவாக்கம் செய்வதால், சீன படையினர் மற்றும் முன்னாள் படைவீரர்கள் எளிதாக எல்லைகளுக்கு சென்று வரமுடியும்’ என்றார். முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன் சீன அதிபர் ஜி ஜின்பிங், திபெத்தில் உள்ள நிங்சிக்கு வந்தார். அப்போது, இத்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார். இதன் மூலம், திபெத்தின் எல்லைப் பகுதிகளுக்குச் சென்ற முதல் சீனத் தலைவர் என்ற பெருமையை ஜி ஜின்பிங் பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.