Goldstars News
பிரதான செய்திகள்

தலிபான்களின் அதிரடி அறிவிப்பால் உலக நாடுகள் அதிர்ச்சி : ஐக்கிய நாடுகள் சபை - அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட மோஸ்ட் வான்டட் தீவிரவாதிகள் ஆப்கானின் பிரதமர், உள்துறை அமைச்சராக நியமனம்

news-image

புதுடெல்லி: ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட ‘மோஸ்ட் வான்டட்’ தீவிரவாதிகள் பட்டியலில் உள்ளவர்கள் ஆப்கான் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் பதவிக்கு தலிபான்கள் தேர்வு செய்துள்ளனர். இவர்களின் இந்த அதிரடி அறிவிப்பால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன.
ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள்  வெளியேறி ஒருவாரம் முடிந்த நிலையில் நாட்டை கைப்பற்றிய தலிபான்  தீவிரவாதிகள் தற்காலிகமாக புதிய அரசை அமைப்பதற்கான வேலைகளில் தீவிரமாக  உள்ளனர். புதிய தலிபான் ஆட்சியில்  தலிபான் அல்லாத எவருக்கும் இடமில்லை. இடைக்கால அமைச்சரவையின் பதவிக்காலம்  எவ்வளவு காலம் இருக்கும்? என்பது பற்றி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும்,  ஆப்கானில் தேர்தலை நடத்துவதற்கான எந்த அறிவிப்பையும் தலிபான்கள்  வெளியிடவில்லை. இங்கு அமையவுள்ள தலிபான்களின் இஸ்லாமிய அமீரக அரசின் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள முல்லா ஹசன் அகுந்த், ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய தீவிரவாதிகளின் பட்டியலில் உள்ளார். தற்போது இவர் ஆப்கான் பிரதமராக நியமிக்கப்பட்டதால், ஐ.நா மற்றும் உலக நாடுகள் அதிர்ச்சியில் உள்ளன.

இவர், தற்போது தலிபான்களின் சக்திவாய்ந்த அமைப்பான ரஹ்பரி ஷுரா அல்லது தலைமைக் குழுவின் தலைவராக உள்ளார். தலிபான்களின் பிறப்பிடமான கந்தகாரை சேர்ந்த இவர், ரஹ்பரி ஷுராவின் தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றி வந்தார். தலிபான்களின் முந்தைய ஆட்சி காலத்தில்,  ஆப்கானின் இடைக்கால பிரதமராக முல்லா ஹசன் அகுந்த் நியமிக்கப்பட்டார். சமீபத்தில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்கிய முல்லா கனி  பரதர், ஆப்கானின் புதிய துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்  தான், அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர். அதன்பின்னர்தான்,  ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. அடுத்ததாக, புதிய தலிபான் அரசின் உள்துறை அமைச்சராக சிராஜுதீன் ஹக்கானி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், அமெரிக்காவின் ‘மோஸ்ட் வான்டட்’ (தேடப்படும் குற்றவாளி) ஹிட்லிஸ்ட்டில் அமெரிக்க விசாரணை நிறுவனமான எப்பிஐ வைத்துள்ளது. இவரது தலைக்கு 5 மில்லியன் டாலர் (சுமார் ரூ.36 கோடி) வெகுமதியை அமெரிக்க அரசு அறிவித்தது. சிராஜுதீன் ஹக்கானி தனது தந்தை ஜலாலுதீன் ஹக்கானியின் மரணத்திற்குப் பிறகு தீவிரவாத அமைப்புகளின் முக்கிய இடத்தை பிடித்தார். பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் இருக்கும் தலிபான்களின் நிதி மற்றும் ராணுவ சொத்துக்களை இவரது தலைமையிலான குழு மேற்பார்வையிடுகிறது. ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் தற்கொலை படை தாக்குதல்களை நடத்தியது ஹக்கானியின் குழுதான் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் நடந்த பல தாக்குதல்களுக்கு ஹக்கானி மூளையாக செயல்படாடர். அப்போதைய ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாயை படுகொலை செய்ய முயற்சித்தார் என்றும் குற்றச்சாட்டு உள்ளது. புதியதாக அமையவுள்ள அரசில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உலகளாவிய தீவிரவாதிகள் மிக உயர்ந்த பதவியை வகிப்பது இதுவே முதல் முறை. இவ்வாறு இருக்க தலிபான்களின் அரசை, உலக நாடுகள் எவ்வாறு அங்கீகரிக்கும் என்பதுதான் மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. சில நாடுகளின் விதிகளின்படி தலிபான்களை அங்கீகரித்தால், அது தீவிரவாதத்திற்கு எதிரான ஒப்பந்தமாக கருதப்படும். அதேநேரம், தீவிரவாதியான ஒருவர் அரசின் தலைமை பதவிக்கு வரும்போது, அவர் மீதான அனைத்து குற்றங்களும் தள்ளுபடி செய்யப்படவேண்டிய சூழல்களும் உருவாகும். இருந்தும், முல்லா ஹசன் அகுந்த் மற்றும் சிராஜுதீன் ஹக்கானி ஆகியோரை, உலகளாவிய தீவிரவாதிகள் பட்டியலில் இருந்து அகற்றுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்றும் கூறுகின்றனர். ஐ.நா.வின் உலகளாவிய தீவிரவாதிகள் பட்டியலில் ஒரு தீவிரவாதி சேர்க்கப்பட்டால், அவர் தானாகவே உலகின் பெரும்பாலான நாடுகளால் தடை செய்யப்பட்ட நபராக அறிவிக்கப்படுவார். அதன்படி ஐ.நாவின் தீவிரவாத பட்டியலுக்கு இந்தியா அங்கீகாரம் அளித்தது. ஆனால், தலிபான் ஆட்சியை அங்கீகரிக்கும் சில நாடுகளுக்கு, ஆப்கானில் அமைய உள்ள அரசால் சில கடினமான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தலிபான்களை பொருத்தமட்டில், அவர்களுக்கு உலக நாடுகளின் நிதிஉதவி தேவை; அவர்கள் விருப்பப்படி பணம் கிடைக்கவில்லை என்றால், ஆப்கானிஸ்தான் பேரழிவை சந்திக்கும்.

தலிபான்களை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை என்றால், வெளியுறவுகள், கொள்கைகள் என்று எந்தவிதமான சர்வதேச செயல்பாடுகளிலும் பங்கேற்க முடியாது. ஒருவேளை அவர்கள் தங்களை மென்மையானவர்களாக சர்வதேச சமூகத்திடம் காட்டிக் கொண்டால், தீவிரவாதத்துடனான உறவுகளைத் துண்டிக்க வேண்டும். பெண்கள் மற்றும் மத சிறுபான்மையினருக்கு சம அந்தஸ்து வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அதன்பிறகுதான், உலக நாடுகள் உதவிகளை மேற்கொள்ள முடியும். சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டவர் நாட்டின் பிரதமராகவும் (முல்லா ஹசன் அகுந்த்), உள்துறை அமைச்சராகவும் (சிராஜுதீன் ஹக்கானி) தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஆப்கான் மக்கள் குறித்த உலக நாடுகளின் கவலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

''ஐ.நா எடுக்கும் 3 முடிவுகள்''
தலிபான் அரசு தொடர்பாக மூன்று முக்கியமான முடிவுகளை இம்மாதம் ஐக்கிய நாடுகளின் சபை எடுக்கவுள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகள் சங்கங்களின் மிஷனை, அங்கிருந்து வெளியேற்றுவது குறித்து வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் முடிவெடுக்க உள்ளது. இது, புதிய தலிபான் அரசுக்கு மிகவும் முக்கியமான நடவடிக்கையாக இருக்கும். அடுத்ததாக, வரும் 21ம் தேதி, தலிபான் மீதான ஐ.நா-வின் பொருளாதாரத் தடைக்கான காலக்கெடு முடிகிறது. அதனால், தலிபான்களுக்கு எதிரான பொருளாதார தடை நீடிப்பு குறித்து அன்றைய தினம் முக்கிய முடிவு எடுக்கப்படும். இதற்கிடையில், இவர்கள் தங்களது மீதான தடைகளை நீக்க வேண்டும் என்று எதிர்பார்கின்றனர். அதனால், ஐ.நா அங்கீகாரக் குழுவின் முடிவானது, வரும் 21ம் தேதி தனது முடிவை அறிவிக்க உள்ளது. புதிய தலிபான் அரசை ஐ.நா அங்கீகாரம் செய்கிறதா? தலிபான் பிரதிநிதி ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றுகிறாரா? என்பதை உலக நாடுகள் எதிர்பார்த்துள்ளன.

''சீனாவின் சமரசம்!''
ஆப்கானில் தலிபான்கள் இடைக்கால அரசை  அறிவித்த சில மணி நேரங்களில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வெளியிட்ட  அறிக்கையில், ‘தலிபான்களின் ஆட்சிக்கு சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈரான் ஆகிய  நாடுகள் ஆதரவு அளிக்கின்றன. தலிபான்களால் சீனாவுக்கு சில பிரச்னைகள்  உள்ளன. அதனால், அவர்கள்  தலிபான்களிடம் சமரசமாகி உள்ளனர். தலிபான்களுக்கு  சீனா நிதியுதவி அளிக்குமா? என்று கேட்கிறார்கள். சீனா மட்டுமல்ல,  பாகிஸ்தான், ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகளும் நிதியளிக்கும்’ என்று  தெரிவித்துள்ளார்.

''33 பேர் அமைச்சர்கள்''
ஆப்கானில் அமையவுள்ள இஸ்லாமிய அமீரக தலிபான் ஆட்சியில் பிரதமராக முல்லா ஹசன் அகுந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது பெயர் சர்வதேச தீவிரவாத பட்டியலில் உள்ள நிலையில் அவருக்கு கீழ் உள்ள, துணைப்  பிரதமர் முல்லா பரதர், துணைப் பிரதமர் அப்துல் சலாம் ஹன்ஃபி, உள்துறை  அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானி, வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான்  முத்தாகி ஆகியோர் பெயரும் தடை செய்யப்பட்டோர் பட்டியலில் உள்ளது. புதிய அமைச்சரவையில் பிரதமர், இரண்டு துணை பிரதமர்கள், 30 அமைச்சர்கள் உள்ளனர். மொத்தமாக பிரதமர் உட்பட 33 பேர் கொண்ட புதிய தலிபான் அமைச்சரவை விரைவில் பொறுப்பேற்க உள்ளது. இவர்களுக்கு பாதுகாப்பு, உள்துறை, கல்வி, நிதி, தகவல் தொழில்நுட்பம், சட்டம், வளர்ச்சி, குடிநீர், வர்த்தகம், விமான போக்குவரத்து, சாலை போக்குவரத்து, அகதிகள் மறுவாழ்வு உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.