Goldstars News

இலங்கை அரசு அச்சம் - கடலில் மூழ்கிய கப்பல்

news-image

கொழும்பு:இலங்கை அருகே, சரக்கு கப்பல் தீப்பிடித்து மூழ்கியதை அடுத்து, கடலோர பகுதிகளின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாக, இலங்கை அரசு அச்சம் தெரிவித்து உள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த, 'எக்ஸ்பிரஸ் பியர்ல்' என்ற சரக்கு கப்பல், ரசாயனங்களுடன் இலங்கை நோக்கி கடந்த மாதம் வந்தது. கொழும்புவில் இருந்து 18 கி.மீ., தொலைவில் கப்பல் நிறுத்தப்பட்டிருந்த போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கப்பலில் நைட்ரிக் ஆசிட் உள்ளிட்ட பல ரசாயனங்கள் இருந்ததால், தீ கட்டுக்கடங்காமல் எரிந்தது. தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி, மூன்று வாரங்களுக்கு பின் ஒருவழியாக தீயை அணைத்தனர்.

கப்பலை கரைக்கு இழுக்க மேற்கொண்ட முயற்சியும் தோல்வி அடைந்தது. இதற்கிடையே கப்பல் மெல்ல மூழ்க துவங்கியது. இது குறித்து இலங்கை கடலோர சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் தர்ஷினி லஹன்டபுரா கூறியதாவது:மூழ்கிய கப்பலை அகற்ற முடியாதபடி, கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. பருவ மழை காலம் துவங்கி விட்டதால், கப்பலை கரைக்கு இழுத்து வர முடியாது.

கப்பலில் இருந்து வெளியேறிய ரசாயன கழிவுகளால், கடலோர பகுதிகளின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.அதனால் கப்பலின் சுற்றுப்பகுதியில், கழிவுகள் பரவுவதை கண்காணித்து தடுக்க, எக்ஸ்பிரஸ் பியர்ல் நிறுவனம், ஒரு தனியார் நிறுவனத்தை நியமித்து உள்ளது. பருவ மழை காலம் முடிந்த பின், சேதமடைந்த கப்பலை அகற்றும் பணியை வேறு ஒரு நிறுவனம் மேற்கொள்ளும். தீயணைப்பு பணிக்காக, இடைக்கால நிவாரணமாக 300 கோடி ரூபாய் வழங்கும்படி, சிங்கப்பூர் நிறுவனத்திடம் கோரப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.