Goldstars News

பரபரப்பான சூழலில் ஜோ பைடன் - புடின் சந்திப்பு

news-image

வாஷிங்டன்; அமெரிக்கா - ரஷ்யா இடையே உரசல் அதிகரித்துள்ள நிலையில், இரு நாட்டு அதிபர்களும், அடுத்த மாதம் 16ல், நேருக்கு நேர் சந்தித்து பேச முடிவு செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, ரஷ்யாவின் தலையீடு உள்ளதாக, ஜோ பைடன் குற்றஞ்சாட்டியிருந்தார். இதையடுத்து, அவர் அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற உடன், ரஷ்யாவில் எதிர்க் கட்சி தலைவர் நவல்னியை விஷம் வைத்து கொல்ல முயன்ற விவகாரத்தில், அந்நாட்டு அதிகாரிகள் மீது தடை உத்தரவு பிறப்பித்தார். மேலும், அமெரிக்க அரசு கணினியில், தகவல் திருட்டு தொடர்பாக, ரஷ்ய துாதர்கள், 10 பேரை வெளியேற்ற போவதாக அறிவித்தார்.

ஆப்கனில், அமெரிக்க படைகளை தாக்கும் தலிபான்களுக்கு, ரஷ்ய அரசு பரிசு தருவதாக பைடன் குற்றஞ்சாட்டியதுடன், ரஷ்ய அதிபர் புடின் ஒரு கொலையாளி எனக் கருதுவதாகவும், அவர், 'டிவி' ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.அடுத்து, உக்ரைன் வழியாக ஐரோப்பாவிற்கு எண்ணெய் குழாய்கள் அமைப்பதை கண்டித்து, ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் கப்பல்களுக்கு, பைடன், கடந்த வாரம் கூடுதல் தடைகளை விதித்தார்.

இத்தகைய மோதல் போக்கிற்கு நடுவே, சுவிட்சர்லாந்தின், ஜெனீவா நகரில், ஜூன், 16ல் நடைபெறும் உச்சி மாநாட்டில், ஜோ பைடனும், விளாடிமிர் புடினும் நேருக்கு நேர் சந்தித்து பேச உள்ளனர். இருவரும், சர்வதேச பிரச்னைகள் குறித்து பேசுவார்கள் என, வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.