Goldstars News

தடுப்பூசி கிடைக்காமல் தவிக்கும் இந்தியர்கள்

news-image

துபாய்,: குவைத் நாட்டில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அந்நாட்டு குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், அங்கு பணியாற்றும் ஆசிய மற்றும் ஆப்ரிக்காவைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் தவிக்கும் நிலை உருவாகி உள்ளது.

மேற்காசிய நாடான குவைத்தில், ஆசிய மற்றும் ஆப்ரிக்காவைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர்.இந்தியாவைச் சேர்ந்தவர்கள், அதிலும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இவர்கள், பன்னாட்டு நிறுவனங்களின் உயர் பதவிகளில் துவங்கி, பெட்ரோல் பங்குகள், பல்பொருள் அங்காடிகள், ஓட்டல்கள், வீடுகளில் குழந்தைகள் பராமரிப்பு, துப்புரவுப் பணி என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோல வெளிநாடுகளில் இருந்து குவைத் வந்து பணியாற்றுவோர் எண்ணிக்கை, அந்நாட்டு மக்கள் தொகையில், 70 சதவீதம் என கூறப்படுகிறது. அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, இவர்களின் பங்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.குவைத்தில், கடந்த ஆண்டு டிசம்பரில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான பதிவு செய்யும் பணிகள் துவங்கின.

சுகாதாரப் பணியாளர்கள், முதியவர்கள், கடுமையான உடல்நல கோளாறுகள் உள்ளவர்களுக்கு, முதலில் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டது. நாளடைவில், தடுப்பூசி போட்டுக் கொள்ள விண்ணப்பிக்கும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தாமல், குவைத் குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது.தடுப்பூசி செலுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்து, 2.38 லட்சம் வெளிநாட்டு பணியாளர்கள் விண்ணப்பித்தால், டாக்டர்கள், செவிலியர்கள், எண்ணெய் நிறுவனங்களில் உயர் பதவி வகிப்பவர்கள் என, 18 ஆயிரம் பேருக்கு மட்டுமே, தடுப்பூசி போடப்படுவதாக கூறப்படுகிறது.


இதனால், குவைத்தில் கடைநிலைப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிய மற்றும் ஆப்ரிக்க பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உட்பட, லட்சக்கணக்கானோர் தடுப்பூசி கிடைக்காமல் தவிக்கும் நிலை உருவாகி உள்ளது.