Goldstars News

பாக்., ஜவுளித்துறை கலக்கம் - பருத்தி இறக்குமதிக்கு தடை

news-image

கராச்சி:இந்தியாவில் இருந்து பருத்தி இறக்குமதி செய்ய, பாகிஸ்தான் அரசு விதித்துள்ள தடை தொடர்வது, அந்நாட்டு ஜவுளித்துறையினரை கலக்கத்தில் ஆழ்த்திஉள்ளது.

கடந்த, 2019 ஆகஸ்டில், ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதனால் ஆத்திரமடைந்த பாக்., அரசு, இந்தியாவுடனான வர்த்தக உறவை துண்டிதத்து. கொரோனா தொற்று பரவல் காரணமாக, பாகிஸ்தான் ஜவுளித்துறை கடந்த ஓராண்டாகவே வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த, பாக்., பொருளாதார ஒத்துழைப்பு கமிட்டி கூட்டத்தில், இந்தியாவில் இருந்து பருத்தி மற்றும் சர்க்கரை இறக்குமதியை மீண்டும் துவங்க பரிந்துரை செய்யப்பட்டது.பாக்., பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், இந்த பரிந்துரை நிராகரிக்கப்பட்டது.'ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை இந்தியா திரும்ப பெறும் வரை, வர்த்தக தடை தொடரும்' என, இம்ரான் தெரிவித்தார்.

இந்த முடிவு, பாக்., ஜவுளித்துறையினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து, பாக்., ஜவுளி உற்பத்தி அமைப்பின் தலைவர் ஜாவேத் பில்வானி கூறியதாவது:இந்தியாவில் இருந்து பருத்தி மற்றும் பருத்தி நுால் இறக்குமதி செய்ய வேண்டியது தற்போதை நிலையில் அவசியமாகிறது.எனவே, பொருளாதார ஒத்துழைப்பு கமிட்டியின் பரிந்துரையை அரசு கவனத்தில் வைக்க வேண்டும்.

அமைச்சரவையின் அறிவிப்புக்கு பின், பாக்.,கில் பருத்தி நுாலின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளன. இந்தியாவில் இருந்து பருத்தி இறக்குமதி செய்ய அனுமதிக்க முடியாது என்றால், நாட்டில் தட்டுப்பாடு இன்றி பருந்தி நுால் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.அரசின் இந்த முடிவு, பாக்., ஜவுளி ஏற்றுமதி துறையின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.