Goldstars News

ஈஸ்டர் உரையில் ஹோலியை குறிப்பிட்ட அதிபர் ஜோ பைடன்

news-image

வாஷிங்டன்- 'ஈஸ்டர்' பண்டிகையை முன்னிட்டு, உரை நிகழ்த்திய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஹிந்துக்களின், 'ஹோலி' பண்டிகையை குறிப்பிட்டு பேசினார்.கிறிஸ்துவர்களின் ஈஸ்டர் பண்டிகை, நாளை மதியம் கொண்டாடப்பட உள்ளது.

இதை முன்னிட்டு, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், அதிபர் ஜோ பைடன் உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது: ஈஸ்டர் கொண்டாட்டத்திற்காக, நானும், நாட்டின் முதல் பெண்மணி ஜில் பைடனும், ஆவலுடன் காத்திருக்கிறோம். நாங்கள் இருவரும், கொரோனாவுக்கான தடுப்பூசியை ஏற்கனவே செலுத்திவிட்டோம். வரும் ஈஸ்டர் தினத்தன்று, எங்கள் குடும்பத்தினர் சிலர், தடுப்பூசியை செலுத்திக்கொள்ள இருக்கின்றனர்.ஹிந்துக்களின் 'ஹோலி' பண்டிகை, கடந்த வாரம் கொண்டாடப்பட்டது. இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகையும் நெருங்கி வருகிறது. இது, கொண்டாட்டத்திற்கான நேரம் மட்டும் அல்ல, அனைத்து சமூக மக்களுடன் ஒன்றிணைவதற்கான சிறந்த வாய்ப்புகளை வழங்கும் ஆண்டு.முக்கியமில்லாதோர் என யாரும் இல்லை. அனைவருமே முக்கியமானவர்கள் தான். இந்த நேரத்தில், நான் அனைவரிடமும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

கொரோனா தடுப்பூசியை அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டும். அது மிகவும் பாதுகாப்பானது. அதை மக்களிடம் நிரூபிக்கவே, அமெரிக்க அதிபராகிய நான், தொலைக்காட்சிக்கு முன், எனக்கான முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டேன். இவ்வாறு அவர் பேசினார்.
 

 

குறும்பு செய்த அதிபரின் மனைவி

முட்டாள்கள் தினமான நேற்று முன்தினம், அமெரிக்க முதல் பெண்மணியும், அதிபரின் மனைவியுமான ஜில் பைடன், செய்தியாளர்களை ஏமாற்றி, அந்நாளை கொண்டாடினார். கலிபோர்னியாவில் இருந்து வாஷிங்டனுக்கு, ஜில் பைடன், நேற்று முன்தினம், விமானத்தில் பயணித்தார்.மதிய உணவின் போது, விமானக் குழுவை சேர்ந்தவர்போல் உடை அணிந்து, தலையில், 'விக்' வைத்து, முகத்தில் கருப்பு நிற முக கவசம் அணிந்துவந்து, செய்தியாளர்களுக்கு 'ஐஸ்கிரீம்'கள் வழங்கினார். பின், அங்கிருந்து சென்று, 'விக்' இல்லாமல் திரும்பிய ஜில் பைடனை பார்த்து, செய்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின், செய்தியாளர்களிடம் முட்டாள்கள் தின வாழ்த்தை ஜில் பைடன் தெரிவித்தார்.