Goldstars News

மியான்மர் வன்முறைக்கு இந்தியா கடும் கண்டனம்

news-image

நியூயார்க்:மியான்மரில், ராணுவ ஆட்சியின் அடக்குமுறையால் ஏற்பட்ட வன்முறைக்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நம் அண்டை நாடான மியான்மரில், பிப்.,1ல், ராணுவம் திடீர் புரட்சி நடத்தி ஆட்சியை கைப்பற்றியது. அத்துடன், ஆளும் கட்சி தலைவர் ஆங் சான் சூச்சி, அதிபர் யு வின் மைன்ட் உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுதும் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுஉள்ளனர். அவர்களை, ராணுவம் இரும்புக் கரம் கொண்டு அடக்க முயன்று வருகிறது.

இதில் நிகழ்ந்த வன்முறையில், ராணுவத்தினரால், ஏழு குழந்தைகள் உட்பட, 107 பேர் கொல்லப் பட்டனர். ஆனால், 520க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக, மியான்மருக்கான, ஐ.நா., பொதுச் செயலரின் சிறப்பு துாதர் கிறிஸ்டின் ஸ்கரனர் பர்கனர் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே, மியான்மர் பிரச்னை குறித்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், தனிப்பட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. இது குறித்து, ஐ.நா.,வுக்கான இந்திய துாதர், டி.எஸ்.திருமூர்த்தி, 'டுவிட்டரில்' கூறியிருப்பதாவது:ஆலோசனை கூட்டத்தில், மியான்மர் வன்முறைக்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

மக்களின் அதிகபட்ச பாதுகாப்பை ராணுவம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப் பட்டது.மியான்மர் மீண்டும் ஜனநாயக பாதைக்கு திரும்பவும், கைது செய்யப்பட்ட தலைவர்களை விடுவிக்கவும், இந்தியா வலியுறுத்தியது.இது தொடர்பாக ஆசிய நாடுகள் எடுத்து வரும் நடவடிக்கைகளை வரவேற்பதாக தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.