Goldstars News

ரூ.150 லட்சம் கோடி முதலீடு அமெரிக்காவில் அதிரடி திட்டம்

news-image

வாஷிங்டன்:அமெரிக்காவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, 150 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யும் திட்டத்தை, அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.

அமெரிக்காவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுஉள்ள ஜோ பைடன், பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க்கில் நேற்று கூறியதாவது:உள்கட்டமைப்பு வசதிகள், தட்பவெப்ப மாற்றம், கொரோனா தொற்று போன்றவற்றால், அமெரிக்காவின் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அவற்றை மீண்டும் கட்டமைக்க வேண்டியது அவசியம்.உலகில் நமக்கு போட்டியாக சில நாடுகள் உருவாகி வருகின்றன.

இதை எதிர்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.அதனால், உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த, இதுவரை இல்லாத வகையில், 150 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யும் திட்டத்தை துவக்கியுள்ளேன்.உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்தி மிக்க நாடாக, அமெரிக்கா தொடர வேண்டும் என்பது தான் என் விருப்பம்.

உள்கட்டமைப்பு வளர்ச்சியில் நாம், இப்போது, 13வது இடத்தில் உள்ளோம். முதலிடத்தை பிடிக்க வேண்டும். அதற்காக தான், இந்த திட்டம் துவக்கப்படுகிறது.இதனால் அமெரிக்காவில், வேலை வாய்ப்புகள், வரலாற்றில் இல்லாத வகையில் அதிகரிக்கும். பொருளாதாரமும் மாபெரும் வளர்ச்சி பெறும்.இரண்டாம் உலகப் போர் முடிந்த பின், அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை உருவாக்க, அதிக முதலீடு செய்யப்பட்டது.அதன்பின், தற்போது தான், வேலை வாய்ப்பு மற்றும் உள்கட்டமைப்புக்காக அதிக முதலீடு செய்யப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.