Goldstars News

எச் - 1பி விசா வழங்க விண்ணப்பதாரர்கள் தேர்வு

news-image

வாஷிங்டன்:அமெரிக்காவில், 2022 நிதியாண்டின் தேவைக்கு ஏற்ப, 'எச் - 1பி' விசா வழங்க விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில், நிரந்தர குடியுரிமை பெறாமல், அங்கு தங்கியிருந்து பணியாற்ற, எச் - 1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவை, இந்தியர்களும், சீன நாட்டினரும் தான், அதிக அளவில் பெற்று பயனடைந்து வருகின்றனர்.ஆண்டுக்கு, 85 ஆயிரம் பேருக்கு, எச் - 1பி விசாக்கள் வழங்கப்படுகின்றன. இதற்கு, 2.25 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பிக்கின்றனர்.

எனவே, குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு விசாக்கள் வினியோகிக்கப் பட்டு வந்தன.அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், தன் பதவிக்காலம் முடிவடையும் போது, இந்த நடைமுறையை மாற்றி அமைத்தார். குலுக்கல் முறைக்கு பதிலாக, தகுதி அடிப்படையில், எச் - 1பி விசா வழங்க, அவர் உத்தரவிட்டார்.

பின், கடந்த ஜனவரியில், நாட்டின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின், 'இந்த ஆண்டு இறுதி வரை, மீண்டும் குலுக்கல் முறையே பின்பற்றப்படும்' என, அறிவித்தார். இதற்கிடையே, எச் - 1பிவிசாவுக்கு, மின்னணு முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.

இந்நிலையில், அந்த விண்ணப்பங்களில் இருந்து, குலுக்கல் முறையில் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யும் நடைமுறை முடிந்துள்ளது.அடுத்த, 2022 நிதியாண்டின் தேவைக்கு ஏற்ப, விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள்தெரிவித்துள்ளது.