Goldstars News
பிரதான செய்திகள்

இஸ்ரேல் விஞ்ஞானிகள் தகவல் - 20 வயதுக்குட்பட்டவர்களை அதிகம் தாக்காத கொரோனா

news-image

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அதற்கு பல மேலைநாட்டுத் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வைரஸின் வீரியம் வெகுவாகக் குறைந்துள்ளது. பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பரவிய உருமாறிய வைரஸும் தற்போது குறைந்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
வயதுக்கு ஏற்ப உடலில் எதிர்ப்பு சக்தி மாறுபடும். இளைஞர்களை வைரஸ் தாக்கும் சதவீதம் குறைவு எனவும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களை வைரஸ் தாக்கும் வீரியம் அதிகம் எனவும் கடந்தாண்டு விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர்.
இந்த எச்சரிக்கையை நிரூபிக்கும் வகையில் தற்போது இஸ்ரேல் நாட்டில் உள்ள ஜெருசலேம் நகரில் நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சி அமைந்துள்ளது.
20 வயதுக்கு குறைவானவர்கள் கொரோனா வைரஸ் அதிகமாக தாக்குவதில்லை என்று இந்த ஆய்வு கூறுகிறது. மேலும் 20 வயதுக்கு உட்பட்ட பதின்பருவத்தினர் மூலமாக வைரஸ் அதிகமாக பரவவும் வாய்ப்பில்லை என இந்த ஆய்வு முடிவு கூறுகிறது.
இஸ்ரேலின் பெனி பெர்க் என்ற நகரில் இந்த ஆய்வு நடைபெற்றது. அந்நாட்டின் புகழ்பெற்ற ஹாப்பியா பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர்கள் இந்த ஆய்வுக்காக 637 இஸ்ரேல் குடிமக்களை பயன்படுத்தினர். இவர்களுக்கு பிசிஆர் சோதனை செய்யப்பட்டது.

இதன் முடிவுகள் கணிதம் மற்றும் புள்ளியியல் முறையில் கணக்கிடப்பட்டது. இதனால் முடிவுகளில் துல்லியம் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வில் 20 வயதுக்கு உட்பட்ட குடிமக்களுக்கு வைரஸ் பாதிப்பு, வைரஸ் பரவும் விகிதம் குறைவாகவும் இருந்தது தெரியவந்தது. 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் பிஎல்ஓஎஸ் மருத்துவ இதழில் பிரசுரிக்கப்பட்டது.