Goldstars News
பிரதான செய்திகள்

புல்லட் ரயில் பாதை சேதம் - ஜப்பானில் நிலநடுக்கம்

news-image

டோக்கியோ : ஜப்பானின் புகுஷிமா மற்றும் மியாகி மாகாணங்களில், நேற்று முன்தினம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், வீடுகள், ஏராளமான கட்டடங்கள், சாலைகள், 'புல்லட்' ரயில் பாதைகள் சேதமடைந்தன.

கிழக்காசிய நாடான ஜப்பானின் வட கிழக்கு பகுதியில் உள்ள, புகுஷிமா மற்றும் மியாகி மாகாணங்களின் சில பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோலில், 7.3 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால், வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் கடுமையாக அதிர்ந்தன; பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டது.அங்கிருந்த பொருட்கள் தாறுமாறாக சிதறின; கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதனால், 120க்கும் மேற்பட்டோர் லேசான காயம் அடைந்தனர்; உயிரிழப்புகள் ஏதும் இல்லை.

சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதுடன், சாலைகள், புல்லட் ரயில் பாதைகள் கடும் சேதமடைந்தன. பல பகுதிகளில், சாலைகள் மீது பாறைகள் விழுந்துள்ளன. பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், அச்சம் காரணமாக இரவு பொழுதை, திறந்தவெளிகளில் கூடாரம் அமைத்து கழித்தனர்.

புகுஷிமா டாய்-இச்சி அணுமின் நிலையம், எவ்வித பாதிப்பும் இல்லாமல் தப்பியது.டோக்கியோ நகரை வடக்கு பகுதிகளுடன் இணைக்கும், கடற்கரை சாலையில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் ரயில் பாதை சீரமைப்பு பணிகள் உடனடியாக துவங்கப்பட்டன.மின் இணைப்பு சீரமைப்பு பணிகளும், போர்க்கால அடிப்படையில் நடக்கின்றன. 'நிலநடுக்க மையப் பகுதி, கடலில் 55 கி.மீ., ஆழத்தில் இருந்ததால், 'சுனாமி' உருவாகவில்லை' என, அதிகாரிகள் கூறினர்.