Goldstars News
பிரதான செய்திகள்

இந்திய பெண் போட்டி - ஐ.நா., பொதுச் செயலர் பதவி

news-image

நியூயார்க்:ஐ.நா., பொதுச் செயலர் பதவிக்கு, இந்தியாவில் பிறந்து, கனடாவில் வசிக்கும், அரோரா அகன் ஷா, 34, போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

கடந்த, 2017ல், ஐ.நா., பொதுச் செயலராக, ஆன்டோனியோ குட்டரஸ் பதவி ஏற்றார். இவரது பதவிக் காலம், இந்தாண்டு டிச., 31ல் முடிவடைகிறது. அவர், மீண்டும் பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், ஐ.நா., வளர்ச்சித் திட்ட கணக்கு தணிக்கை அமைப்பாளரான அரோரா அகன் ஷா, பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
 

 

அகதிகள்

இது தொடர்பாக அவர், சமூக வலைதளத்தில், 'வீடியோ' பிரசாரத்தையும் துவக்கி விட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:என்னைப் போன்ற பெண்கள், அதிகாரமிக்க தலைமை பொறுப்பிற்கு வருவதில்லை. தங்களுக்கான காலம் வரும் வரை காத்திருக்கின்றனர்.உலகம் எவ்வழியோ, அவ்வழியே நடக்கும் மனோபாவத்துடன் பணியாற்றி வருகின்றனர். நான் அதுபோல இருக்க விரும்பவில்லை.

கடந்த, 75 ஆண்டுகளில், ஐ.நா., உலகிற்கு அளித்த உறுதிமொழிப்படி, அகதிகளை காக்கவில்லை. குறைந்தபட்ச அளவிற்குத் தான் மனிதநேயத்தை காட்டியுள்ளது. முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஐ.நா., தேவை. இதற்கு முன் தலைமை பொறுப்பு வகித்தவர்கள், ஐ.நா.,வின் நடவடிக்கைகளுக்கு, அதை பொறுப்பேற்கச் செய்ய தவறி விட்டனர். அரசியல்வாதிகளுக்கு காவடி துாக்குவதை நிறுத்தி விட்டு, மக்களுக்கு சேவையாற்றும் நேரம், ஐ.நா.,வுக்கு வந்து விட்டது. அதை முன்னின்று செய்யவே, பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிடுகிறேன். இவ்வாறு, அவர் கூறி உள்ளார்.
 

ஈர்ப்பு

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் பரிந்துரைக்கும் நபர், ஐ.நா., பொதுச் சபை உறுப்பு நாடுகளின் ஆதரவை பெறும்பட்சத்தில், பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்படுவார். ஐ.நா., வரலாற்றில் முதன் முறையாக, பொதுச் செயலர் பதவிக்கு, இந்தியாவில் பிறந்து வெளிநாட்டில் வசிக்கும் பெண் போட்டியிடுவதாக அறிவித்திருப்பது, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.