Goldstars News
பிரதான செய்திகள்

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்க ஆக்ஸ்போர்டு முடிவு

news-image

லண்டன் : கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை, குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதிக்க, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில், கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.இங்கு, 'பைசர் மற்றும் பயோ என் டெக்' நிறுவனத்தின் தடுப்பூசியும்; ஆஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும், 'ஆஸ்ட்ராஜெனகா' நிறுவனத்தின் தடுப்பூசியும், மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. முதற்கட்டத்தில், மருத்துவ ஊழியர்கள், 70 வயதை கடந்தவர்கள் உள்ளிட்டோருக்கு, தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன.சில மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், குழந்தைகளுக்கான தடுப்பூசிகளையும் பரிசோதித்து வருகின்றன.

பைசர் நிறுவனம், தன் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்தி செய்யும் பரிசோதனைகளை, கடந்த அக்டோபரில் துவங்கியது.இதேபோல், மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி, கடந்த டிசம்பர் முதல், குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், குழந்தைகளுக்கு தடுப்பூசியை செலுத்தி பரிசோதிக்க, ஆக்ஸ்போர்டு பல்கலையும் முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, ஆக்ஸ்போர்டின் தலைமை ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரூ போலார்டு நேற்று கூறியதாவது:ஆக்ஸ்போர்டு பல்கலையும், ஆஸ்ட்ராஜெனகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசி மருந்து, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

பெரும்பாலும், கொரோனா வைரசால், குழந்தைகள் மோசமாக பாதிக்கப்படுவது இல்லை. எனினும், அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவேண்டியது அவசியம். எனவே, குழந்தை களுக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி, ஆறு முதல், 17 வயதுக்கு இடைப்பட்ட, 300 தன்னார்வலர்களுக்கு, முதலில் தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப் பட உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.