Goldstars News
பிரதான செய்திகள்

டிரம்ப் மீதான கண்டன தீர்மானம் செனட்டில் விவாதம் துவங்கியது

news-image

வாஷிங்டன்:அமெரிக்க பார்லிமென்ட் வளாகத்தில் நடந்த வன்முறையை துாண்டியதாக,முன்னாள் அதிபர், டொனால்டு டிரம்ப் மீதான கண்டன தீர்மானம் மீதான விவாதம், செனட் சபையில் துவங்கியது.

அவருக்கு எதிராக, ஜனநாயகக் கட்சி, எம்.பி.,க்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அமெரிக்க அதிபராக, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, ஜோ பைடன், கடந்த மாதம் பதவி ஏற்றார். முன்னதாக தேர்தல் முடிவுகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக, பார்லி.,யின் கூட்டுக் கூட்டம், கடந்த மாதம், 6ம் தேதி நடந்தது. அப்போது, அதிபராக இருந்த குடியரசு கட்சியைச் சேர்ந்த, டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள், 'கேப்பிடோல்' எனப்படும் பார்லிமென்ட் வளாகத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

அதையடுத்து, டிரம்ப் மீது, கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பிரதிநிதிகள் சபையில் நிறைவேறிய இந்தத் தீர்மானம் மீது,செனட் சபையில்,நேற்று முன்தினம் விவாதம் துவங்கியது. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, எம்.பி.,க்கள், தங்களுடைய வாதங்களை முன்வைத்தனர். மூத்த எம்.பி.,யான ஜெமி ரஸ்கின் தலைமையில், இந்த விவாதம் நடந்தது.

'அதிபர் பதவியில் இருந்த டிரம்ப், போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வராமல்,போராட்டத்தில் ஈடுபட தன் ஆதரவாளர்களை துாண்டிவிட்டுள்ளார்' என, அவர்கள் வாதங்களை முன் வைத்தனர். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, இந்தியாவை பூர்வீகமாக உடைய, எம்.பி.,க்களான, ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால் உள்ளிட்டோர், இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 'பார்லி.,யில் ஓட்டெடுப்பு நடக்கையில், டிரம்புக்கு எதிராக நிச்சயம் ஓட்டளிப்போம்' என, அவர்கள் கூறியுள்ளனர்.