Goldstars News
பிரதான செய்திகள்

தொடரும் சீனாவின் பிடிவாதம் - பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா

news-image

பீஜிங் : 'ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் தரும் விவகாரத்தில், எங்களுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதே நேரத்தில் கவுன்சிலை சீரமைக்க அனைவரும் ஏற்கும் திட்டம் தேவை' என, சீனா கூறியுள்ளது.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், சீனா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்தாண்டு ஜனவரியில், இந்தியா தற்காலிக உறுப்பினரானது. வரும் ஆகஸ்டில், அது தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ளது. இதற்கிடையே, கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராவதற்காக இந்தியா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. மற்ற நான்கு நாடுகள் ஆதரவு தெரிவித்தாலும், சீனா அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு கவுன்சில் தொடர்பாக, இந்தியா - சீனா இடையே, நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் ஆலோசனை நடந்தது.


இது குறித்து, சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், வாங்க் வென்பின் கூறியதாவது: பயங்கரவாதத்தை ஒடுக்குவது, அமைதிப் படை நடவடிக்கைகள், பல நாடுகள் இடையேயான ஒத்துழைப்பு என, பல பிரச்னைகள் குறித்து, இரு தரப்பும் ஆலோசனை நடத்தின.கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக இந்தியாவை சேர்க்கும் விவகாரத்தில், சீனாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும், அதன் அதிகாரம் மற்றும் செயல்பாடு மேம்பட வேண்டும், முடிவெடுக்கும் விஷயத்தில், அதிக நாடுகளுக்கு அதிகாரம் வேண்டும் என்பதே சீனாவின் நிலைப்பாடு.ஆனால், இது அனைத்து தரப்பினரும் ஏற்கக் கூடியதாக இருக்க வேண்டும். அதற்கு விரிவாக விவாதிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.