Goldstars News
பிரதான செய்திகள்

டிரம்புக்கு எதிராக ஓட்டளித்த 6 எம்.பி.,க்கள் கண்டன தீர்மானம் மீது விசாரணை துவக்கம்

news-image

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக இருந்த, டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம் மீது விசாரணை நடத்துவது தொடர்பான தீர்மானத்துக்கு, டிரம்புக்கு எதிராக அவருடைய குடியரசு கட்சியைச் சேர்ந்த, ஆறு எம்.பி.,க்கள் ஓட்டளித்துள்ளனர்.அதையடுத்து, கண்டன தீர்மானம் மீதான விவாதம் துவங்குகிறது.

அமெரிக்க அதிபர் பதவிக்கு, கடந்தாண்டு நடந்த தேர்தலில், ஜனநாயகக் கட்சியின், ஜோ பைடன் வென்றார். கடந்த மாதம், 20ம் தேதி, 46வது அதிபராக பதவியேற்றார். முன்னதாக தேர்தல் முடிவுகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக, பார்லி.,யின் கூட்டுக் கூட்டம், கடந்த மாதம், 6ம் தேதி நடந்தது. அப்போது, அதிபராக இருந்த, குடியரசு கட்சியைச் சேர்ந்த டிரம்பின் ஆதரவாளர்கள், 'கேப்பிடோல்' எனப்படும், பார்லிமென்ட் வளாகத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.வன்முறையைத் துாண்டியதாக, டிரம்ப் மீது கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பிரதிநிதிகள் சபையில் நிறைவேறிய அது, செனட் சபையில் விவாதிக்கப்பட உள்ளது.

செனட் சபையில், தற்போது, இரு கட்சிகளுக்கும், தலா, 50 எம்.பி.,க்கள் உள்ளனர். மொத்தம், 67 எம்.பி.,க்கள் ஓட்டளித்தால் மட்டுமே, டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானம் நிறைவேறும். அமெரிக்க வரலாற்றிலேயே, இரண்டு முறை கண்டன தீர்மானத்தை சந்தித்த முதல் அதிபராகிறார் டிரம்ப். மேலும், பதவியில் இருந்து வெளியேறிய பிறகு, கண்டன தீர்மானத்தை சந்திக்கும் முதல் அதிபராகிறார் அவர்.'டிரம்ப், அதிபர் பதவியில் இல்லாததால், அவருக்கு எதிரான கண்டன தீர்மானம் மீது விவாதிப்பது சட்டவிரோதமானது' என, அவருடைய தரப்பில் செனட் சபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

அது குறித்த ஓட்டெடுப்பின்போது, டிரம்புக்கு எதிராக, அவருடைய குடியரசு கட்சியைச் சேர்ந்த, ஆறு எம்.பி.,க்கள் ஓட்டளித்துள்ளனர். அதையடுத்து, கண்டன தீர்மானம் மீதான விவாதம், செனட் சபையில் துவங்க உள்ளது. கண்டன தீர்மானத்தை தாக்கல் செய்துள்ள ஜனநாயகக் கட்சி தரப்புக்கும், டிரம்பின் வழக்கறிஞர்களுக்கும், தங்களுடைய வாதத்தை முன்வைக்க, தலா, 16 மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.