Goldstars News
பிரதான செய்திகள்

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி திட்டத்தை ரத்து செய்த தென் ஆப்ரிக்கா

news-image

ஜோகன்ஸ்பா்க்: பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்குச் செலுத்தும் திட்டத்தை தென் ஆப்ரிக்கா முழுமையாக ரத்து செய்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில் தென் ஆப்ரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது கொரோனாவை விட பல மடங்கு ஆபத்தானது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு பி-1351 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுவரை 41 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரசை தற்போது செயல்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பு மருந்துகள் குணப்படுத்துமா என பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலையின் தடுப்பூசிக்கு இந்த புதுவகை கொரோனாவை தடுக்கும் திறன் இல்லாதது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், ஆக்ஸ்போர்டு பல்கலை, அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தும் திட்டத்தை நிறுத்திவைத்தி வைத்திருந்த தென் ஆப்ரிக்க சுகாதாரத் துறை அமைச்சகம், தற்போது அதனை முழுமையாக ரத்து செய்துள்ளது. அதற்குப் பதிலாக, இதுவரை அங்கீகரிக்கப்படாத ஜான்ஸன் அண்டு ஜான்ஸன் நிறுவன கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி புதுவகைக் கொரோனாவை எந்தளவுக்குத் தடுக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.