Goldstars News
பிரதான செய்திகள்

மியான்மரில் போராட்டத்தை கலைக்க துப்பாக்கியால் சுட்டு போலீஸ் எச்சரிக்கை

news-image

யாங்கூன்:மியான்மரில், ராணுவ புரட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களை, கலைந்து செல்லும்படி எச்சரித்து, போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
 

 

144 தடை

நம் அண்டை நாடான மியான்மரில், கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், ஆங் சான் சூச்சி தலைமையிலான, ஜனநாயக தேசிய லீக் கட்சி பெருவாரியான இடங்களை கைப்பற்றி, ஆட்சியை தக்கவைத்தது. இந்த தேர்தலில், தில்லு முல்லு செய்து வெற்றி பெற்றதாக, ஆளுங்கட்சி மீது, ராணுவம் குற்றம் சாட்டியது.

இதையடுத்து, ராணுவம், திடீரென புரட்சி நடத்தி, ஆட்சியை சமீபத்தில் கைப்பற்றி, அவசர நிலையை பிரகடனப்படுத்தியது. ஆங் சான் சூச்சி, அதிபர் வின் மின்ட் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். சூச்சிக்கு ஆதரவாக, 6ம் தேதி முதல், நாடு முழுதும், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் யாங்கூன் மற்றும் மண்டலே ஆகிய பகுதிகளில், போராட்டம் நடத்த போலீசார் தடை விதித்தனர். இங்கு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும், இரவு, 8:00 மணி முதல், காலை, 4:00 மணி வரை, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
 

ரப்பர் குண்டு

ஆனாலும், மண்டலே நகரில், நேற்று காலை, பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். கூட்டத்தை கலைந்து செல்லும்படி, போலீசார் வேண்டுகோள் விடுத்தனர். போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை.இதையடுத்து, அவர்களை எச்சரிக்கும் விதமாக, வானத்தை நோக்கி இரண்டு முறை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.தண்ணீரை பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைத்தனர். 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சமூகவலைதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

யாங்கூனில் உள்ள, நட்பிடாவ் என்ற இடத்தில், போராட்டக்காரர்கள் மீது, ரப்பர் குண்டுகளால் போலீசார் சுட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், பலர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.