Goldstars News

வூஹான் ஆய்வகத்தில் வல்லுனர் குழு விசாரணை

news-image

வூஹான்: உலக சுகாதார அமைப்பின் வல்லுனர் குழு, கொரோனா வைரஸ் குறித்து, சீனாவின் வூஹான் நகர ஆய்வகத்தில் விசாரணை நடத்தியது.

கடந்த ஆண்டு, சீனாவின் வூஹான் நகரில் உள்ள பிராணிகள் சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்பட்டது. அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், சீனா திட்டமிட்டு, கொரோனா வைரசை, ஆய்வகத்தில் உருவாக்கியதாக குற்றம்சாட்டினார்.ஆனால், இந்த புகார்களை சீனா மறுத்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட மாமிச உணவு வகைகளில் இருந்து கொரோனா வைரஸ் தோன்றியிருக்கலாம் என, சீனா கூறுகிறது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த, வல்லுனர்கள் குழு, கடந்த, ஆறு நாட்களாக, பல மருத்துவமனைகள், ஆராய்ச்சி மையங்கள், பிராணிகள் சந்தை உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று, ஏராளமானோரின் கருத்துக்களை கேட்டறிந்தது. நேற்று, வூஹானில் உள்ள வைரஸ் ஆய்வகத்திற்கு சென்று, கொரோனா வைரஸ் குறித்து, அங்குள்ள ஆய்வாளர்களிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தியது. இதையடுத்து வெளியே வந்த குழு, செய்தியாளர்களை சந்திக்காமல் சென்று விட்டது. முன்னதாக, இக்குழுவைச் சேர்ந்த, பீட்டர் டஸக் என்பவரின் பேட்டியை, ஜப்பானைச் சேர்ந்த, 'டி.பி.எஸ்., டிவி' ஒளிபரப்பியது.அதில், ''வூஹான் வைரஸ் ஆய்வகத்தில் உள்ள முக்கிய ஆய்வாளர்களிடம் கொரோனா வைரஸ் தோன்றியது குறித்து பல கேள்விகள் கேட்கப்படும்,'' என தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் வல்லுனர் குழுவின் அறிக்கை வெளியாகும்பட்சத்தில், கொரோனா எங்கு, எப்படி தோன்றியது என்பதற்கான விடை கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.