Goldstars News
பிரதான செய்திகள்

டிரம்பை ஏமாற்றிய தபால் ஓட்டு - வெற்றியின் விளிம்பில் பிடன்

news-image

வாஷிங்டன் : உலகம் முழுதும் எதிர்பார்க்கப்பட்ட, அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடன், வெற்றியின் விளிம்பில் உள்ளார். தபால் ஓட்டுகளில் பெரும்பாலானவை, பிடனுக்கு ஆதரவாக பதிவாகியிருந்ததால், டொனால்டு டிரம்புக்கு பின்னடைவு ஏற்பட்டது.

அமெரிக்க அதிபர் தேர்தல், கடந்த, 3ல் நடந்தது. குடியரசுக் கட்சி சார்பில், தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிட்டார். ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், 77, போட்டியிட்டார்.
 

 

தாமதம்

தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி, தொடர்ந்து நடந்து வருகிறது. மொத்தம் உள்ள, 50 மாகாணங்களில், 46ல், முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. பதிவான ஓட்டுகளின் அடிப்படையில், 'எலக்டோரல் காலேஜ்' எனப்படும், மாகாணங்களின் வாக்காளர் குழுவினர் தான், அதிபரை தேர்வு செய்ய முடியும். அமெரிக்காவின் அதிபராக வேண்டுமெனில், மொத்தம் உள்ள, 538 எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களில், 270 உறுப்பினர்களின் ஆதரவு அவசியம். நேற்று முன்தினம் நிலவரப்படி, ஜோ பிடனுக்கு, 253 உறுப்பினர்களின் ஆதரவும், டொனால்டு டிரம்புக்கு, 213 பேரின் ஆதரவும் கிடைத்தது.
 

ஜார்ஜியா, பென்சில்வேனியா உள்ளிட்ட நான்கு மாகாணங்களில், ஓட்டு எண்ணும் பணி, நேற்றும் தொடர்ந்தது. பெரும்பாலான ஓட்டு கள், 'இ - மெயில்' வாயிலாக பதிவாகியிருந்ததால், அவற்றை, சரிபார்த்து, உறுதிப்படுத்தி எண்ண வேண்டியிருந்தது. இதனால், ஓட்டுகள் எண்ணும் பணியில், மிகுந்த தாமதம் ஏற்பட்டது. ஜார்ஜியா மாகாணத்தில், டிரம்பை விட, பல ஆயிரம் ஓட்டுக்கள் பின்தங்கியிருந்த, ஜோ பிடன், நேற்றிரவு நிலவரப்படி, டிரம்பை விட அதிக ஓட்டுக்களுடன் முன்னேறியிருந்தார்.

இதற்கு, ஜோ பிடனுக்கு ஆதரவாக, தபால் ஓட்டுக்கள் அதிக அளவில் விழுந்ததே காரணம்.இதனால், ஜார்ஜியா, பென்சில்வேனியா, நவேடா, வடக்கு கரோலினா ஆகிய நான்கு மாகாணங்களில் ஏதாவது ஒன்றில் அதிக ஓட்டுகள் கிடைத்தாலும் போதும்.அதிபர் ஆவதற்கு தேவையான, 270 எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களின் ஆதரவை, ஜோ பிடன் சுலபமாக பெற்று விடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, பென்சில்வேனியா, நவேடா ஆகிய மாகாணங்களிலும், டிரம்பை விட, ஜோ பிடன் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளதாக, 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை, நேற்று இரவு செய்தி வெளியிட்டது. இதனால், ஜோ பிடன், வெற்றி உறுதியாகி விட்டதாக தகவல் வெளியானது.
 

தேர்தல் நிலவரம் குறித்து, ஜோ பிடன், செய்தியாளர்களிடம் பேசியதாவது:ஓட்டு எண்ணிக்கை நிலவரம் மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து ஓட்டுக்களும் எண்ணி முடிக்கப்பட்ட பின், அதிபர் பதவிக்கு நானும், துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிசும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதுவரை, மக்கள் அமைதி காக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார். இதற்கிடையே, நேற்று வெள்ளை மாளிகையில், டிரம்ப் கூறியதாவது:தபால் ஓட்டுக்களில் மிகப் பெரிய அளவிற்கு தில்லுமுல்லு நடந்து உள்ளது. ஓட்டு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும். ஜனநாயக கட்சி என்ற பெயர் வைத்து, ஜனநாயகத்தையே திருடுகின்றனர். முக்கியமான இந்த தேர்தலில், ஓட்டுக்களை திருடி ஊழல் புரிவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.
 

விரக்தி

ஓட்டு எண்ணிக்கையை எதிர்த்து வழக்கு தொடருவோம். சட்டப்படி பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டால், நாங்கள் சுலபமாக வெற்றி பெறுவோம்.இவ்வாறு, அவர் கூறினார். இதையடுத்து, ''இன்றல்ல, என்றுமே நம் ஜனநாயகத்தை, யாரும் நம்மிடம் இருந்து பறிக்க முடியாது,'' என, ஜோ பிடன், 'டுவிட்டரில்' பதிலடி கொடுத்துள்ளார். இந்நிலையில், அமெரிக்க பத்திரிகைகள், ஓட்டு எண்ணிக்கையில் தில்லுமுல்லு நடந்துள்ளதாக, டிரம்ப் பொய் பேசுவதாக கூறியுள்ளன. இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகள், தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடக்கும் ஓட்டு எண்ணிக்கையில் ஊழல் நடப்பதாக டிரம்ப் கூறுவது, அவர் தோல்வியின் விரக்தியில் இருப்பதை காட்டுவதாக தெரிவித்து உள்ளன.
 

வழக்கு தள்ளுபடி

ஜார்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதால், ஓட்டு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என, டிரம்ப் ஆதரவு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். ஓட்டு எண்ணிக்கையின் போது, செல்லாத ஓட்டுக்கள் சேர்க்கப்பட்டதாக மனுவில் கூறப்பட்டிருந்தது. 'இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை' என கூறி, மிச்சிகன், ஜார்ஜியா மாகாண நீதிமன்றங்கள் மனுக்களை தள்ளுபடி செய்துள்ளன.

 

120 ஆண்டுகளுக்குப் பின்...

அமெரிக்காவில், 1900ல் நடந்த அதிபர் தேர்தலில், அதிகபட்சமாக, 73.7 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி இருந்தன. இதற்கு அடுத்தபடியாக, 120 ஆண்டுகளுக்குப் பின், தற்போதைய தேர்தலில் தான், மிக அதிகமாக, 66.9 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன.கடந்த, 2016ல் நடந்த அதிபர் தேர்தலில், 56 சதவீதம்; 2008ம் ஆண்டில், 58 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியிருந்தன.மாகாணங்களை பொறுத்தவரை, ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்ற மின்னசோட்டா, 79.2 சதவீத ஓட்டுக்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. குடியரசுக் கட்சி வென்ற, மெய்னி மாகாணம், 78.6 சதவீத ஓட்டுப் பதிவுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்தாண்டு அதிபர் தேர்தலில் ஓட்டளிக்கத் தகுதியான, 23.90 கோடி பேரில், 16 கோடி பேர், ஓட்டு போட்டுள்ளனர்.