Goldstars News
பிரதான செய்திகள்

ஐ.நா.,வில் அமைச்சர் ஸ்மிருதி உறுதி - பாலியல் குற்றத்துக்கு கடும் தண்டனை

news-image

நியூயார்க் : “குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், இந்தியாவில் சட்டங்கள் உள்ளன,” என, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசினார்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் செயல்பட்டு வரும் ஐக்கிய நாடுகள் சபையில், பெண்களுக்கான நான்காம் மாநாட்டின், 25வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக, நேற்று நடந்த உயர்மட்ட கூட்டத்தில், நம் நாட்டின் சார்பில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவில், வளர்ச்சியை நோக்கிய எங்கள் பயணத்தில், பாலின சமத்துவத்தையும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதையும், நாங்கள் அங்கீகரிக்கிறோம். இந்த கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்தில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்விற்காக, இந்திய அரசு, பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

உலகம் முழுதும் உள்ள பெண்களுக்காக, கொரோனாவுக்கு பிந்தைய உலகத்தை கட்டமைக்க, இந்தியா உறுதிபூண்டுள்ளது.பெண்களுக்காக, மருத்துவம், சட்டம், போலீஸ், தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து தேவைகளும் கிடைக்க, நாடு முழுதும் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள், இளம்பெண்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோரின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த, 'தேசிய ஊட்டச்சத்து திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2022க்குள், ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நாடாக, இந்தியா மாறிவிடும் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும்.

இந்தியாவில் உள்ள சட்டங்கள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை கிடைக்க வழிவகுக்கின்றன.இவ்வாறு, அவர் பேசினார்.