Goldstars News
பிரதான செய்திகள்

இந்திய - சீன வெளியுறவு அமைச்சர்கள் ரஷ்யாவில் நாளை மறுதினம் சந்திப்பு

news-image

மாஸ்கோ : கிழக்கு லடாக் எல்லை பிரச்னை தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி இடையே ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நாளை மறுதினம் (செப். 10) பேச்சு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த நான்கு மாதங்களாக இந்தியா - சீனா இடையே கிழக்கு லடாக் எல்லையில் மோதல் போக்கு நிலவி வருகிறது.சீனப் படையினர் பாங்காங் சோ ஏரியின் தெற்கு கரைப் பகுதியில் தங்கள் முந்தைய நிலையில் இருந்து மாறி ஆக்கிரமிப்பில் ஈடுபட முயன்றனர். இந்த அத்துமீறலை நம்படையினர் முறியடித்தனர்.இந்நிலையில் எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் ரஷ்யா சென்றார்.அங்கு சீன ராணுவ அமைச்சர் வெய் பெங்கேவுடன் எல்லை பிரச்னை தொடர்பாக அவர் பேச்சு நடத்தினார். இதில் சுமுக தீர்வு எட்டப்படவில்லை.

இதையடுத்து எஸ்.சி.ஓ.மாநாட்டில் பங்கேற்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ரஷ்யா செல்கிறார். சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி நாளை (செப். 09) ரஷ்யா வந்தடைகிறார்.எல்லை பிரச்னை தொடர்பாக இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள் நாளை மறுதினம் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சந்திப்பின் போது 3488 கி.மீ. தொலைவு கொண்ட எல்லை கட்டுப்பாட்டு பகுதியில்குறைந்த படைகளை நிறுத்தவும் பாங்காங் சோ வடக்கு கரைப் பகுதியில் முந்தைய நிலையை பின்பற்றவும் சீனாவிடம் அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்துவார்' என கூறப்படுகிறது.