Goldstars News
பிரதான செய்திகள்

டிரம்ப் - ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா சீனாவுக்கு சொந்தமாகிவிடும்

news-image

வாஷிங்டன்: 'அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்து ஜோ பிடன் அதிபரானால், அமெரிக்காவை சீனர்கள் சொந்தமாக்கிக் கொள்வார்கள்' என, டிரம்ப் பேசியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவ., 3ம் தேதி நடைபெறுகிறது. குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை அதிகாரபூர்வ வேட்பாளராக அந்தக் கட்சி நேற்று அறிவித்தது. துணை அதிபர் வேட்பாளராக தற்போது துணை அதிபராக இருக்கும் மைக் பென்ஸ் மீண்டும் போட்டியிட உள்ளார். ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக ஜோ பிடனும், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசும் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் அதிபர் டிரம்ப், ''நவம்பர் மாதம் நடக்கும் அதிபர் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக அமெரிக்க வரலாற்றில் இருக்கும். இந்த தேசம் மிகக் கொடுமையான திசையில் செல்லப் போகிறதா அல்லது சிறந்த பாதையில் செல்லப்போகிறதா என்பதை முடிவு செய்யும் தேர்தல். இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் வாக்குகளைத் திருடுவதற்குத் திட்டமிட்டுள்ளார்கள். கடந்த முறை தேர்தலில் உளவு பார்த்தார்கள். இந்த முறை மின்னஞ்சல் வாக்குகளைத் திருட முயல்கிறார்கள். இது தேசத்துக்கே அவமானம். நவம்பர் மாதம் தேர்தலில் ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்து ஜோ பிடன் அதிபரானால், அமெரிக்காவை சீனர்கள் சொந்தமாக்கிக் கொள்வார்கள். சீனாவிலிருந்துதான் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை அமெரிக்க மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். நம்முடைய தேசம் ஒருபோதும் கம்யூனிஸ்ட் நாடாக இருக்காது,'' என்றார்.