Goldstars News
பிரதான செய்திகள்

கங்காரூவை அமெரிக்காவில் கைது செய்த போலீசார்

news-image

வாஷிங்டன்: அமெரிக்காவில் வாகன நடமாட்டம் அதிகமிக்க தெருவில் துள்ளி குதித்து, சுற்றி திரிந்த கங்காரூவை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்த வினோத சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் லாடர்டேல் பகுதியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாலூட்டி விலங்கான கங்காரூ, தெருக்களில் ஜாலியாக சுற்றி திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஜாக் என செல்லமாக அழைக்கப்படும் கங்காரூவை, சுற்றி வளைத்த போலீசார், தங்களது வாகனத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து சென்று ஐந்து நட்சத்திர ஓட்டல் அளவிற்கு உபசரித்து, சிறையில் அடைத்துள்ளனர். மேலும் கங்காரூவை தங்களது புதிய நண்பனாகவும் போலீசார் வர்ணித்துள்ளனர்.

இந்நிலையில், தான் வீட்டுவேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்த போது, திறந்திருந்த கேட் வழியாக வீட்டை விட்டு வெளியே கங்காரூ ஓடி விட்டதாக 4 மாதமாக வளர்த்து வந்த ஜாக்கின் உரிமையாளரான அந்தோணி மாகியாஸ் கூறியுள்ளார். ஜாக் ஓய்வெடுக்கும் நேரத்தில் போலீசார் பாதுகாப்பாக கைது செய்து, நகரை விட்டு வெளியே உள்ள பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர் என உள்ளூர் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார். வெளிநாடுகளை சேர்ந்த விலங்குகளுக்கு, லாடர்டேல் நகருக்குள் வளர்ப்பது சட்டவிரோதம் என்பதால், நகருக்கு வெளியே உள்ள தெற்கு புளோரிடா விலங்குகள் காப்பகத்தில், கங்காரூவை போலீசார் ஒப்படைத்துள்ளனர்.