Goldstars News
பிரதான செய்திகள்

ஐ.நா., பொது செயலர் எச்சரிக்கை - இளைஞர்களை இழுக்கும் பயங்கரவாத அமைப்புகள்

news-image

நியூயார்க் : 'உலகம் முழுவதும் கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் கோபத்திலும் விரக்தியிலும் உள்ள இளைஞர்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பயங்கரவாத அமைப்புகள் ஈடுபட்டுள்ளன' என ஐ.நா. பொது செயலர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார்.

இது குறித்து ஐ.நா. பொது செயலர் நேற்று கூறியதாவது:ஐந்தில் ஒரு இளைஞனுக்கு கல்வி பயிற்சி வேலைவாய்ப்பு ஆகியவை மறுக்கப்படுகின்றன. நாலில் ஒரு இளைஞர் வன்முறை மற்றும் யுத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆண்டுதோறும் 1.2 கோடி சிறுமியர் தாயாகின்றனர். இது போன்ற பல பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் இளைஞர்கள் தற்போது கொரோனா நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இதன் காரணமாக வீடுகளில் முடங்கிக் கிடக்கும் அவர்கள் அதிக நேரத்தை சமூக வலைதளங்களில்செலவிடுகின்றனர். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இளைஞர்களை மூளை சலவை செய்து வன்முறை பக்கம் இழுக்கும் பணியில் பல பயங்கரவாத அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.இவ்வாறு அவர்கூறினார்.
ஆப்கனில் குறைந்த பலி எண்ணிக்கை : தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையினருக்கும் தலிபான்களுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது. இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட எண்ணிக்கை மூன்று மடங்கு குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.சமீபத்தில் நடந்த தாக்குதல்களில் 150 குழந்தைகள் உட்பட 533 பேர் கொல்லப்பட்டனர். இந்த பலி எண்ணிக்கை வழக்கத்தைவிட மிக குறைவு என கூறப்படுகிறது.

.ரூ.7 லட்சம் கோடி தேவை : ஐ.நா.வின் மனிதாபிமானவிவகார பிரிவின் தலைவரும் அவசரகால நிவாரண ஒருங்கணைப்பாளருமான மார்க் ஆன்ட்ரூ லோகாக் கூறியதாவது: உலகின் பல ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு கொரோனா தொற்று பரவவில்லை. அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களில் பாதிப்பு ஏற்பட கூடும். அப்படி ஏற்பட்டால் 70 கோடி ஏழை மக்கள் பாதிக்கப்படுவர். அவர்களின் வருவாய் உணவு மற்றும் மருத்துவ உதவிகளுக்கு ௭ லட்சம் கோடி ரூபாய் நிதி தேவைப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.