Goldstars News

நோயாளிகள் புறக்கணிக்கப்படும் அவலம் - பிரிட்டனில் பிபிஇ.,க்கள் பற்றாக்குறை

news-image

லண்டன்: துருக்கியில் இருந்து வரும் மருத்துவப் பொருட்கள், பிபிஇ எனப்படும் கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள மருத்துவர்கள் அணிந்துகொள்ளும் பிரிட்டனுக்கு வந்து சேராததால் பல நோயாளிகளும் மருத்துவப் பணியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகி உள்ளது.

போதுமான பிபிஇ-க்கள் வந்து சேராததால் மருத்துவப் பணியாளர்கள் உயிரை பணயம் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதா அல்லது தங்களது உயிரைத் தற்காத்துக்கொள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் மரணம் அடைய விடுவதா என்கிற அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து துருக்கி கப்பல் போக்குவரத்து அதிகாரிகள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்து வருகின்றனர். துருக்கி துறைமுகத்தில் இருந்து கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள பிபிஇ-க்கள் இன்று வந்துவிடும், நாளை வந்துவிடும் என கூறி பல நாட்களாக இழுத்தடிக்கின்றனர். இதனால் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மிகவும் தாமதம் ஆகிறது. என்.ஹெச்.எஸ் மருத்துவமனைகளுக்கு மருத்துவப் பொருட்கள் அனுப்பும் ஏஜண்ட் கிரிஸ் ஹாப்ஸன் கூறுகையில், மருத்துவர்களுக்கு பிபிஇ-க்கள் இந்த வாரம் வந்து சேரும் என நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்துள்ளார். இதனால் பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சகம் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

கொரோனா அறிகுறி தென்பட்டவுடன் என்.ஹெச்.எஸ்-சில் வரிசைப்படி பெட் கிடைப்பது பெரும் பாடாக உள்ள நிலையில் பிபிஇ இல்லாத காரணத்தால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தாமதமாவது நோயாளிகளின் உறவினர்களுக்கு மேலும் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. சரியான பிபிஇ-க்கள் இல்லாத காரணத்தால் என்.ஹெச்.எஸ்-ல் இதுவரை 80 மருத்துவப் பணியாளர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். உயிரைக் கொடுத்து அடுத்தவர்களது உயிரைக் காக்கும் மருத்துவப் பணியாளர்கள் மீது பிரிட்டன் அரசு கொஞ்சமும் அக்கறை செலுத்தவில்லை என எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. போரிஸ் ஜான்ஸனின் அரசு பேச்சளவில் மட்டுமே அதன் வீரியத்தைக் காட்டுகிறது, செயலில் அல்ல என எதிர்கட்சிகள் விமர்சிக்கின்றனர்.