Goldstars News
பிரதான செய்திகள்

அமெரிக்கர்கள் கொதிப்பு - அரசு நிவாரணத்தில் டிரம்ப் பெயர் பொறிக்க உத்தரவு

news-image

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்றின் மையமாக அமெரிக்கா மாறியுள்ளது. அங்கு இதுவரை, 6.41 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 28,399 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது; தொற்சாலைகளும் தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால், கடந்த மாதம் மட்டும் அமெரிக்காவில், 1.6 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் அடுத்த வேளை உணவுக்கு வழியற்ற நிலையை அடைந்துள்ளனர்.

இப்படி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவை மீட்டெடுக்க, கடந்த மாதம் இரண்டு ட்ரில்லியன் டாலர்கள் நிவாரண தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள லட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

'நிதியுதவிக்கான காசோலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பெயர் பொறிக்கப்பட வேண்டும்' என, நேற்று இரவு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் மைய அரசினால் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தில் அமெரிக்க அதிபர் ஒருவரின் பெயர் பொறிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த புதிய செயல்பாட்டால், மக்களுக்கு நிவாரணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதை, அமெரிக்க கருவூல அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்களில், பெயர் அச்சிடுவது, முகம் அச்சிட்ட ஸ்டிக்கர்களை ஒட்டுவது போன்ற கலாச்சாரம் இந்தியாவில் பெருமளவில் உள்ளது. ஆனால், அமெரிக்கர்களுக்கு இது முற்றிலும் புதுமையான ஒன்று. இதனால், பல்வேறு தரப்பினரும் டிரம்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இரு நாட்களுக்கு முன், எல்லா அதிகாரமும் தனக்கு மட்டுமே இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார். தற்போது, நிவாரண நிதி வழங்கும் காசோலையில் தன் பெயரை பொறிக்க உத்தரவிட்டுள்ளார். தனக்கே அதிகாரம், தான் மட்டுமே மக்களைக் காப்பவன் என்பது போன்ற பிம்பத்தை உருவாக்க டிரம்ப் முயற்சிப்பதையே இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன. இது அவரது சர்வாதிகார மனநிலை, உச்சத்தை அடைந்து வருவதைக் உணர்த்துகிறது' என, அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.