Goldstars News

கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்த டாக்டருக்கும் பாதிப்பு

news-image

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் முதல் பலியான கர்நாடகாவை சேர்ந்தவருக்கு, சிகிச்சை அளித்த டாக்டருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவியது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 129 பேர் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், கர்நாடகாவின் கல்புர்கி மாவட்டத்தை சேர்ந்த முகமது ஹுசைன் சித்திக், 76, என்ற முதியவர், சவுதி அரேபியாவுக்கு சென்று, சமீபத்தில் இந்தியா திரும்பினார்.

காய்ச்சல், இருமல், சளியால் பாதிக்கப்பட்டதையடுத்து, அவர், தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், அவரது ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

பரிசோதனை முடிவுகள் தெரிய வரும் முன், கடந்த, 10ம் தேதி அவர் இறந்தார். சோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்த வைரஸ் தொற்றால் இந்தியாவின் முதல் பலியாக பதிவானது. இந்நிலையில் சித்திக்கை பரிசோதனை செய்த 63 வயதான டாக்டருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட அவர், தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். மேலும், சித்திக்கிற்கு சிகிச்சை அளித்த 63 பேரும் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.