Goldstars News
பிரதான செய்திகள்

இத்தாலியில் கொரோனா வைரசிற்கு முதல் பலி

news-image

படுவா : சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2360 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இத்தாலியிலும் கொரோனா வைரஸ் பரவ துவங்கி உள்ளது. இதற்கு வடக்கு மாகாணமான படுவா பகுதியில் ஒருவர் பலியாகி உள்ளார்.

சீனாவின் வூஹான் கண்டறியப்பட்ட கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ், தற்போது வரை 28 நாடுகளில் பரவி உள்ளது. கொரோனா வைரசால் சீனாவில் மட்டும் 77,672 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 12,071 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தென்கொரியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 400ஆக அதிகரித்துள்ளது. ஒரே இடத்தில் மக்கள் அதிகமாக கூடுவதை தடுத்திட, பொதுக்கூட்டங்களுக்கும், பேரணிகளுக்கும், தென்கொரிய அரசு தடை விதித்துள்ளது. ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதால் தென் கொரிய அரசு தீவிர தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் இத்தாலி, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவ துவங்கி உள்ளது. இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, இத்தாலியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனாவிற்கு இத்தாலியில் முதல் உயிரிழப்பு நடந்துள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இத்தாலியில் முதல் பலி நடந்துள்ளதை அடுத்து, வடக்கு மாகாணத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அதிகமானவர்கள் ஒரே இடத்தில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.