Goldstars News
பிரதான செய்திகள்

மசூத் அஸார் விவகாரம் அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்

news-image

மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க அனைத்து வாய்ப்புகளும் பயன்படுத்தப்படும் என்ற அமெரிக்காவின் கருத்துக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. 

ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரும் வரைவு தீர்மானத்தை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளிடம் அமெரிக்கா கடந்த மாதம் 27-ஆம் தேதி வழங்கியது. இதற்கு பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால், அமெரிக்காவின் இந்த வரைவு தீர்மானம் சட்ட விதிமுறை மீறல் என்று குற்றம்சாட்டி அமெரிக்காவுக்கு சீனா கண்டனம் தெரிவித்தது. 

இதைத்தொடர்ந்து, அமெரிக்கா இந்த விவகாரம் தொடர்பாக நேற்று (செவ்வாய்கிழமை) தெரிவிக்கையில், "ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க அனைத்து வாய்ப்புகளையும் அமெரிக்கா பயன்படுத்தும்" என்றது.   

இந்நிலையில், அமெரிக்காவின் இந்த கருத்துக்கு பதிலடி தரும் வகையில் சீன வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ஜெங் சுவாங் இன்று (புதன்கிழமை) தெரிவிக்கையில், 

"ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை அல்-கொய்தா தடை ஆலோசனைக் குழு விதிமுறைகளின்படியே சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க விரும்புகிறார்கள். அமெரிக்கா கொண்டுவந்துள்ள வரைவு தீர்மானம் மூலம் முடிவு காண விரும்பவில்லை. 

இந்த விஷயத்தில் நேர்மறையான முடிவை எட்டுவதற்கு சீனா கடுமையாக செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவுக்கும் அது தெரியும். இந்த சூழ்நிலையில் அமெரிக்கா தொடர்ந்து வரைவு தீர்மானத்தை வலியுறுத்தி வருவது அறிவார்ந்த செயல் அல்ல. 

அமெரிக்காவின் நடவடிக்கைகள் தொடர்ந்து ஐ.நா விதிமுறைகள் மற்றும் வழக்கமான நடவடிக்கைகளை மீறும் செயலாகவே உள்ளது. இதன்மூலம், ஒரு தவறான உதாரணமாக அமெரிக்கா விளங்குகிறது. இது இந்த விவகாரத்தை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்குகிறது. அது தெற்காசியாவின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உகந்தது அல்ல. 

இந்த விவகாரத்தில் சீனா ஆக்கப்பூர்வமான மற்றும் பொறுப்பான நோக்கத்துடன் ஆலோசனைகளில் பங்கெடுக்கும். இந்த விவகாரம் இறுதியில் சரியான முறையில் முடிவுக்கு வரும்" என்றார்.  

முன்னதாக, பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரும் தீர்மானம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அல்-காய்தா தடை ஆலோசனைக் குழுவில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு சீனா முட்டுக்கட்டை போட்டு வருகிறது.