Goldstars News
பிரதான செய்திகள்

எதிர்ப்பை மீறி ராக்கெட் ஏவியதா ஈரான்

news-image

அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி, ஈரான் தனது ராக்கெட்டை விண்ணில் செலுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அண்மையில் வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் இந்த சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: அமெரிக்காவைச் சேர்ந்த டிஜிடர்குளோப் ஆய்வு அமைப்பு, ஈரானின் இமாம் கமேனி விண்வெளி ஆய்வு மையத்தின் படத்தை கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
அந்தப் படத்தில், ஏவுதளத்தின்மீது ஒரு ராக்கெட் நிறுத்தப்பட்டிருந்தது. எனினும், புதன்கிழமை வெளியிடப்பட்ட அந்த ஆய்வு மையத்தின் செயற்கைக்கோள் புகைப்படத்தில், அந்த ராக்கெட் காணப்படவில்லை.
மேலும், ராக்கெட் புறப்பட்டு சென்ற பிறகு காணப்படும் கரிப்படிவங்களைப் போன்ற தோற்றம் ஏவுதளத்தில் காணப்படுகிறது.
எனவே, இடைப்பட்ட நேரத்தில் அந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும், அந்த ராக்கெட் ஏவப்பட்டு, அதிலிருந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்பட்டதா? என்பது குறித்து உடனடி தகவல்கள் இல்லை.
அந்த ராக்கெட்டில், ஈரானில் தயாரிக்கப்பட்டது', 40-ஆவது ஆண்டு' என்று பார்ஸி மொழியில் எழுத்தப்பட்டிருந்தது. ஈரானில் இஸ்லாமியப் புரட்சியின் 40-ஆவது ஆண்டு தினத்தைக் குறிக்கும் வகையில் அவ்வாறு எழுதப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
எனினும், ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது குறித்து ஈரான் ஊடகங்கள் உடனடியாக உறுதிப்படுத்தவில்லை. ஏற்கெனவே இதுபோன்ற முந்தைய நிகழ்வுகள் குறித்து சிறிது தாமதத்துக்குப் பிறகே அதுகுறித்து செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே, தனது செயற்கைக்கோளை சொந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த ஈரான் கடந்த மாதம் முயன்றது. ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்தது.
இந்த நிலையில், மற்றொரு செயற்கைக்கோளை புதிய ராக்கெட் மூலம் ஈரான் விண்ணில் செலுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.