Goldstars News
பிரதான செய்திகள்

அமெரிக்காவில் விசா மோசடி 129 இந்திய மாணவர்கள் கைது

news-image

அமெரிக்காவில் மாணவர் விசா (நுழைவு இசைவு) நீட்டிப்பு பெற வேண்டும் என்பதற்காக போலியான பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் 129 இந்திய மாணவர்கள் உள்பட 130 பேர் கைது செய்யப்பட்டனர். 
இந்நிலையில், தில்லியில் உள்ள அமெரிக்க தூதருக்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில், ""அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களின் நலன் மற்றும் கெளரவம் குறித்து இந்திய அரசு கவலை கொண்டுள்ளது. அவர்களுடன் இந்திய அதிகாரிகள் உடனடியாக தொடர்புகொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
பிரச்னை என்ன?: அமெரிக்காவில் மாணவர் விசாவை நீட்டித்தபடி சட்டவிரோதமாக தங்கி பணிபுரிபவர்களை பொறி வைத்து பிடிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை சார்பில் ரகசிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, மிச்சிகன் மாகாணத்தில் ஃபார்மிங்டன் என்ற போலியான பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. அங்கு பணத்தை கட்டிவிட்டு கல்வி பயிலாமல், வெவ்வேறு இடங்களில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. 
அதன்படி, வெளிநாட்டை சேர்ந்த பலர், ஃபார்மிங்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தங்களுக்கான மாணவர் விசாவை நீட்டித்து அமெரிக்காவில் தங்கியிருந்தனர். சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருக்கும் விதமாக மாணவர்களை சேர்ப்பதற்கான தேர்வாளர்களும் செயல்பட்டுள்ளனர்.
அதிரடி நடவடிக்கை: அதுபோன்ற தேர்வாளர்கள் 8 பேரை கடந்த வார தொடக்கத்தில் அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் ஆவர்.
இதைத்தொடர்ந்து போலியாக விசா நீட்டிப்பு பெற்ற 129 இந்தியர்கள் உள்பட 130 மாணவர்களை, அமெரிக்க குடியேற்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களில் பலர் தடுப்புக் காவல் மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் அல்லது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களைப் போன்றே மேலும் 650 மாணவர்கள் சிக்கலில் இருப்பதாகத் தெரிகிறது.
போலி விசா பெற்றதாக கைது செய்யப்பட்டவர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.